பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் கீழ்சாத்தம்பூர் அருகே உள்ள கே.ராசாம்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 42). லாரி டிரைவர். இவருடைய மனைவி போதுமணி (38). இவர்களுக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிறது. கார்த்திகேயன் தினந்தோறும் மது குடித்து விட்டு மனைவி போதுமணியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் குடிபோதையில் வீட்டுக்கு வந்த கார்த்திகேயனுக்கும், மனைவி போதுமணிக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த கார்த்திகேயன் மனைவியை இரும்பு கம்பியால் தலையில் தாக்கினாராம். அப்போது இதை தடுக்க வந்த மாமனார் செல்லப்பனையும் (70) இரும்பு கம்பியால் தாக்கியதாக தெரிகிறது.
இதில் படுகாயமடைந்த 2 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதில் போதுமணி மேல்சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். செல்லப்பன் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
குடிபோதையில் மனைவி மற்றும் மாமனாரை இரும்பு கம்பியால் தாக்கிய கார்த்திகேயனை பரமத்தி போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.