தாய், மகளை காரில் கடத்தி 13½ பவுன் நகை பறிப்பு; 7 பேர் கைது

குன்னத்தூர் அருகே தாய், மகளை காரில் கடத்தி 13½ பவுன் நகையை பறித்த 7 பேர் கொண்ட கும்பலை தனிப்படை போலீசார் கைது செய்தனர். சம்பவம் நடந்த 48 மணி நேரத்தில் வழிப்பறி ஆசாமிகளை கைது செய்த தனிப்படையினரை போலீஸ் ஐ.ஜி. பாராட்டினார்.

Update: 2023-06-08 16:53 GMT

குன்னத்தூர் அருகே தாய், மகளை காரில் கடத்தி 13½ பவுன் நகையை பறித்த 7 பேர் கொண்ட கும்பலை தனிப்படை போலீசார் கைது செய்தனர். சம்பவம் நடந்த 48 மணி நேரத்தில் வழிப்பறி ஆசாமிகளை கைது செய்த தனிப்படையினரை போலீஸ் ஐ.ஜி. பாராட்டினார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தாய், மகளை காரில் கடத்தல்

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே காவுத்தம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமேஸ்வரி (வயது 42). இவர் கடந்த 4-ந் தேதி காலை 4 மணிக்கு மீன்கடைக்கு செல்ல தனது கணவர் வெள்ளைச்சாமியுடன் மொபட்டில் சென்றுள்ளார். அப்போது அவருடைய மகள் ரஞ்சிதா மற்றும் தங்கையின் மகன் முத்துக்குமார் ஆகியோர் மற்றொரு ஸ்கூட்டரில் பின்னால் சென்று கொண்டிருந்தனர். கூடபாளையம் சுடுகாடு அருகே சென்றபோது, அந்த வழியாக வந்த பதிவெண் மறைக்கப்பட்ட வெள்ளை நிற கார் நடுரோட்டில் நின்றது.

இதைப்பார்த்து இருசக்கர வாகனங்களில் சென்ற ராமேஸ்வரி, ரஞ்சிதா உள்ளிட்டவர்கள் நின்றனர். அப்போது காட்டுப்பகுதியில் இருந்து ஒரு கும்பல் கையில் கத்தி, அரிவாளுடன் வந்து இருசக்கர வாகனத்தை தள்ளிவிட்டு ராமேஸ்வரியை காரில் கடத்தி சென்றது. இதனால் அதிர்ச்சியடைந்த ராமேஸ்வரியின் மகள் ரஞ்சிதா இருசக்கர வாகனத்தில் காரை துரத்தி சென்றார். தாசம்பாளையம் பிரிவு அருகே சென்றதும் காரை திடீரென்று நிறுத்தியதில் ரஞ்சிதாவின் இருசக்கரவாகனம் காரில் மோதி சாய்ந்தது. உடனே காரில் வந்தவர்கள் அரிவாளை காட்டி மிரட்டி ரஞ்சிதாவையும் காரில் ஏற்றி கடத்தி சென்றனர். பின்னர் அந்த கும்பல் காரில் வைத்து ராமேஸ்வரி, ரஞ்சிதா 2 பேரிடம் இருந்து 13½ பவுன் நகையை பறித்துக்கொண்டு செங்கப்பள்ளி பைபாஸ் ரோட்டில் உள்ள பேக்கரி அருகே தாய், மகளை இறக்கி விட்டு தப்பியது. சினிமா மிஞ்சும் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தனிப்படையினர் விசாரணை

இதுதொடர்பாக ராமேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் குன்னத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன் உத்தரவின்படி, குன்னத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பிகா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், தவசியப்பன், அமல் ஆரோக்கியதாஸ் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி கார் குறித்த தடயங்களை சேகரித்தனர். அப்போது அந்த கார் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் இருப்பது கண்டறியப்பட்டது. அங்கு விரைந்த தனிப்படையினர் கிணத்துக்கடவு ஏழுர் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (48), திருப்பூர் நல்லூரை சேர்ந்த இசக்கிபாண்டி (32) ஆகிய 2 பேரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

7 பேர் கைது

அவர்கள் கூறிய தகவலின் பேரில் இந்த வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட திருநெல்வேலி மாவட்டம் பழையபேட்டையை சேர்ந்த அருண்பாண்டியன் (23), ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வீரம்பாளையத்தை சேர்ந்த சேகர் (29), சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த அருள்செல்வம் (31), ஊத்துக்குளி நடுப்பட்டியை சேர்ந்த பிரபு (29), திருப்பூர் ரங்கநாதபுரத்தை சேர்ந்த லோகநாதன் (30) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 10¼ பவுன் நகைகள், ரூ.4,300, 2 செல்போன்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள், கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதில் பிரபு, லோகநாதன் ஆகியோர் மற்ற 5 பேருக்கும், வழிப்பறிக்கு அடையாளம் காட்டி கூட்டுச்சதி செய்தது கண்டறியப்பட்டது.

போலீஸ் ஐ.ஜி. பாராட்டு

தாய், மகளை கத்தி முனையில் காரில் கடத்தி தங்க நகைகளை பறித்துச்சென்ற சம்பவம் நடந்து 48 மணி நேரத்தில் 7 பேரை கைது செய்த தனிப்படையினரை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர், திருப்பூர்மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன் ஆகியோர் நேற்று பாராட்டி வெகுமதி வழங்கினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்