கோபியில் தொழில் அதிபர் வைத்திருந்த ரூ.2¾ கோடியை கொள்ளையடித்ததாக என்ஜினீயர்கள் 2 பேர் கைது; பரபரப்பு தகவல்கள்

கோபியில் தொழில் அதிபர் வைத்திருந்த ரூ.2¾ கோடியை கொள்ளையடித்ததாக என்ஜினீயர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பான பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளன.

Update: 2023-04-09 21:05 GMT

கடத்தூர்

கோபியில் தொழில் அதிபர் வைத்திருந்த ரூ.2¾ கோடியை கொள்ளையடித்ததாக என்ஜினீயர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பான பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளன.

ரூ.2¾ கோடி

ஈரோடு மாவட்டம் கோபி வடக்கு பார்க் வீதியைச் சேர்ந்தவர் முரளிராம். அவருடைய மகன் சுதர்சன் (வயது 27). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். திருப்பூர் மாவட்டம் அவினாசியை சேர்ந்தவர் சுகந்தி. இவருக்கு சொந்தமான கோபி பாரதி வீதியில் உள்ள வீட்டை சுதர்சன் ரூ.2¼ கோடிக்கு வாங்குவதற்கு விலையை பேசி ரூ.15 லட்சம் முன்பணமும் கொடுத்திருந்தார். மீதமுள்ள தொகை, ரியல் எஸ்டேட் தொழிலுக்கான பணம் என மொத்தம் ரூ.2 கோடியே 80 லட்சம் மற்றும் 2½ பவுன் நகை ஆகியவற்றை புதிதாக வாங்க இருக்கும் வீட்டில் படுக்கை அறையில் உள்ள ஒரு அலமாரியில் 4 பேக்குகளில் வைத்திருந்தார்.

கொள்ளை

இந்த நிலையில் 7-ந் தேதி மதியம் சுதர்சன் அந்த வீட்டுக்கு சென்று பார்த்தபோது வீட்டின் படுக்கை அறையில் 4 பேக்கில் வைத்திருந்த ரூ2 கோடியே 80 லட்சம் மற்றும் 2½ பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இது குறித்து கோபி போலீஸ் நிலையத்தில் சுதர்சன் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

மேலும் கோபி போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவேலு, பங்களாப்புதூர் இன்ஸ்பெக்டர் வடிவேல் குமார், பவானி இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, ஈரோடு தாலுகா இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர் செல்வம் ஆகியோர் தலைமையிலான 30 பேர் கொண்ட 4 தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையர்களை தேடி வந்தனர்.

வாகன சோதனை

மேலும் கொள்ளை சம்பவம் நடந்த வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு ேகமராவின் பதிவையும் போலீசார் ஆய்வு செய்தனர். அதில் சம்பவத்தன்று வீட்டு முன்பு இருந்து 2 கார்கள் புறப்பட்டு சென்றது பதிவாகியிருந்தது. இதைத்தொடர்ந்து அந்த கார்களின் பதிவு எண்ணை வைத்து போலீசார் விசாரித்தபோது காரின் உரிமையாளர்கள் சத்தியமங்கலம், கோபி பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் கரட்டடிபாளையத்தில் உள்ள ஒரு தியேட்டர் அருகே தனிப்படை போலீசார் நேற்று திடீர் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக 2 கார்கள் வந்து கொண்டிருந்தன. போலீசாரை கண்டதும் கார்களை நிறுத்திவிட்டு அதில் இருந்து 2 பேர் இறங்கி தப்பி ஓட முயன்றனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் 2 பேரையும் துரத்தி சென்று பிடித்து விசாரணை நடத்தினார்கள்.

கட்டுக்கட்டாக பணம்

மேலும் அவர்கள் வந்த கார்களையும் போலீசார் சோதனை செய்தனர். அதில் ஒரு காரில் கட்டுக்கட்டாக பணம் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் அவர்கள் 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் அவர்கள் சத்தியமங்கலம் அருகே உள்ள குமாரபாளையம் பகுதியை சேர்ந்த பிரவீன் (34), கோபி அருகே உள்ள அளுக்குளி கணபதி நகரை சேர்ந்த ஸ்ரீதரன் (27) ஆகியோர் என்பதும், இவர்கள் தான் சுதர்சன் புதிதாக வாங்கும் வீட்டில் வைத்திருந்த ரூ.2¾ கோடி, நகையை கொள்ளையடித்தவர்கள் என்பதையும் ஒப்புக்கொண்டனர்.

தொழிலில் நஷ்டம்

மேலும் அவர்கள் 2 பேரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில் வெளியான பரபரப்பு தகவல்கள் வருமாறு:-

ஸ்ரீதரன் பி.இ. முடித்துவிட்டு சிவில் என்ஜினீயராக பணிபுரிந்து வந்துள்ளார். அதேபோல் பிரவீன் பி.இ. முடித்து விட்டு கோவையில் உள்ள பிரபல ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். மேலும் 2 பேரும் உறவினர்கள் ஆவர்.

இந்த நிலையில் கொரோனா காலத்தில் ஸ்ரீதரனும், பிரவீனும் வேலை இழந்துள்ளனர். அதன்பின்னர் 2 பேருக்கும் சுதர்சனிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இ்தன் மூலம் 2 பேரும் ரியல் எஸ்டேட் தொழிலில் சுதர்சனின் பங்குதாரர்களாக சேர்ந்துள்ளனர். அப்போது பிரவீன் ஒரு தொழில் சம்பந்தமாக ஒரு நிறுவனத்தில் ரூ.13 லட்சம் முதலீடு செய்துள்ளார். இதில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

திட்டம் தீட்டினர்

இந்த நிலையில் சுதர்சன் புதிதாக வீடு வாங்க பணம் வைத்திருப்பதையும், அதை அவர் வாங்க இருக்கும் புதிய வீட்டில் வைத்திருப்பதையும் பிரவீனும், ஸ்ரீதரும் தெரிந்து வைத்திருந்தனர். அதைத்தொடர்ந்து 2 பேரும் அந்த பணத்தை கொள்ளையடிக்க முடிவு செய்ய திட்டம் தீட்டினர்.

இந்தநிலையில் சுதர்சன் புதிதாக வாங்க இருக்கும் வீடு பூட்டி கிடப்பதை அறிந்த 2 பேரும் கடந்த 7-ந் தேதி அதிகாலை அங்கு தனி தனியாக 2 கார்களில் சென்றனர். பின்னர் வீட்டு கதவின் பூட்டை உடைத்து திறந்து 2 பேரும் உள்ளே புகுந்துள்ளனர். அதன்பிறகு அங்கு படுக்கை அறையின் அலமாரியில் 4 பைகளில் வைத்திருந்த ரூ.2 கோடியே 80 லட்சம் மற்றும் 2½ பவுன் நகை ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு காரில் தப்பி சென்றுள்ளனர்.

கைது

இந்த நிலையில் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை மற்றொரு நிறுவனத்தில் முதலீடு செய்வதற்காக கார்களில் சென்றபோது போலீசாரிடம் பிரவீனும், ஸ்ரீதரும் வாகன சோதனையில் சிக்கிக்கொண்டனர்.

இதைத்தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூ.2 கோடியே 80 லட்சம், 2½ பவுன் நகை மீட்கப்பட்டது. மேலும் கொள்ளையடிக்க பயன்படுத்தப்பட்ட 2 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட பணம் கோபி போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதையொட்டி அங்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்