நல்லம்பள்ளி அருகே லாரி டிரைவர்களை மிரட்டி பணம் பறித்த 3 பேர் கைது

Update: 2022-10-10 18:45 GMT

நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளி அருகே லாரி டிரைவர்களை மிரட்டி பணம் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

லாரி டிரைவரிடம் பணம் பறிப்பு

சேலத்தில் இருந்து தர்மபுரிக்கு சரக்கு ஏற்றி கொண்டு லாரி ஒன்று புறப்பட்டது. இந்த லாரியை வேலு என்பவர் ஓட்டி வந்தார். டிரைவர் வேலு தடங்கம் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அருகே உள்ள சர்வீஸ் ரோட்டில் நேற்று அதிகாலை லாரியை நிறுத்தினார். பின்னர் அவர் சிறுநீர் கழிப்பதற்காக லாரியில் இருந்து இறங்கினார்.

அப்போது இருட்டில் மறைந்திருந்த 3 பேர் கொண்ட கும்பல் லாரி டிரைவர் வேலுவை சுற்றி வளைத்தது. அவர்கள் வேலுவை மிரட்டி ரூ.1,000 மற்றும் ரூ.10 ஆயிரம் மதிப்புடைய அவருடைய செல்போனை பறித்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

3 பேர் கைது

இந்த சம்பவம் குறித்து வேலு, அதியமான்கோட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை சேகரித்து விசாரித்தனர். அப்போது, லாரி டிரைவர் வேலுவிடம் பணம், செல்போனை பறித்தது தர்மபுரி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த சக்திகுமார் (வயது 19), ஜெயசூர்யா (24), சையத்மன்சூர் (22) என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில் அவர்கள், கடந்த சில வாரங்களுக்கு முன்பு அதே பகுதியில் லாரி டிரைவர் ஒருவரை மிரட்டி பணம், செல்போனை பறித்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். 

மேலும் செய்திகள்