தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்களில் தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது நகை, ரூ.40 ஆயிரம் பறிமுதல்
தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்களில் தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது நகை, ரூ.40 ஆயிரம் பறிமுதல்
பாலக்கோடு:
பாலக்கோடு, காரிமங்கலம் பகுதிகளில் இரவு நேரங்களில் கடைகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பணம், பொருட்களை திருடி சென்றனர். இந்த நிலையில் கடந்த மாதம் 26-ந் தேதி இரவு பாலக்கோடு தீர்த்தகிரி நகரில் செந்தில் என்பவரின் நிதி நிறுவனத்தில் பூட்டை உடைத்து பணம், நகை திருட்டு போன சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டவர்களை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
அந்த வகையில் நேற்று பாலக்கோடு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பாலக்கோடு பகுதியில் சந்தேகபடும்படி சுற்றித்திரிந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த சீனிவாசன் (வயது 30) என்பதும், நிதி நிறுவனத்தில் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. மேலும் அவர் தர்மபுரி, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி பகுதிகளில் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து சீனிவாசனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 2 பவுன் நகை, ரூ.40 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.