பாண்டமங்கலம் அருகே காப்பர் வயர் திருடியவர் கைது 2 பேருக்கு வலைவீச்சு
பாண்டமங்கலம் அருகே காப்பர் வயர் திருடியவர் கைது 2 பேருக்கு வலைவீச்சு
பரமத்திவேலூர்:
பாண்டமங்கலம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சேகர் (வயது 55). இவர் பாண்டமங்கலம் அருகே உள்ள முனியகவுண்டம்பாளையத்தில் சவுண்ட் சர்வீசுக்கு தேவையான பொருட்களை குடோனில் வைத்திருந்தார். இந்த நிலையில் சேகர் நேற்று முன்தினம் இரவு குடோனிற்கு பொருட்களை எடுக்க சென்றார். அப்போது அங்கே மர்ம நபர்கள் சிலர் குடோனிற்குள் புகுந்து அங்கிருந்த காப்பர் வயர்களை திருடி கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அக்கம், பக்கத்தினரை சத்தம் போட்டு அழைத்து காப்பர் வயர்களை திருடியவர்களை பிடிக்க முயன்றார்.
இதில் இருவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். மற்றொருவரை பிடித்து பரமத்திவேலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். பிடிபட்ட நபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் காப்பர் வயரை திருடியவர் எருமப்பட்டி அருகே உள்ள காவக்காரன்பட்டியை சேர்ந்த ராமசாமி மகன் சக்தி என்ற சக்திவேல் (22) என்பதும், தற்போது இவர் பரமத்தி அருகே உள்ள சுண்டப்பனை ரொட்டிக்காரர்காடு பகுதியில் வசித்து வருவதும் காப்பர் வயரை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து சக்திவேலை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள காப்பர் வயரை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.