கந்துவட்டி கேட்டு பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

திருப்புல்லாணி அருகே பெண்ணிடம் கந்துவட்டி கேட்டு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-06-12 19:20 GMT

ராமநாதபுரம், ஜ

திருப்புல்லாணி அருகே பெண்ணிடம் கந்துவட்டி கேட்டு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.

அதிக வட்டி

தமிழக முதல்-அமைச்சர் உத்தரவின்படி மாநிலம் முழுவதும் ஆபரேசன் கந்துவட்டி நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆபரேசன் கந்துவட்டி என்ற பெயரில் அதிக வட்டிக்கு கடன் வாங்கி கந்துவட்டி கும்பல்களால் மிரட்டப்படுபவர்கள் மற்றும் கந்துவட்டி தொழில் செய்பவர்கள் தொடர்பான புகார்களை தெரிவிக்க தொடர்பு எண்கள் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளன. இந்தநிலையில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கோகுல்நகரை சேர்ந்தவர் அப்துல்சமது என்பவரின் மனைவி கபீபா (வயது39). இவர் திருப்புல்லாணி பள்ளபச்சேரி பகுதியை சேர்ந்த கருப்பையா மகன் சித்திரைச்சாமி (50) என்பவரிடம் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.3 லட்சம் 8 சதவீத வட்டிக்கு வாங்கி இருந்தாராம்.

தொந்தரவு

இதற்காக மாதந்தோறும் ரூ.24ஆயிரம் வட்டி செலுத்தி வந்தாராம். மேலும், அசல் ரூ.3 லட்சத்தில் கடந்த 2020-ம் ஆண்டு ரூ.2 லட்சத்தினை செலுத்திவிட்டு மீதம் உள்ள ரூ.1 லட்சம் மட்டுமே கொடுக்க வேண்டி இருந்ததாம். இந்த தொகையை சித்திரைச்சாமி கேட்டு வீட்டிற்கு அடியாட்களுடன் சென்று தொந்தரவு செய்து வந்தாராம்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை கபீபா மற்றும் அவரின் கணவரும் திருப்புல்லாணி ஆதிஜெகநாதர் கோவில் தெப்பக்குளம் அருகே உள்ள மீன் கடை பகுதியில் நடந்து சென்று கொண்டு இருந்தார்களாம்.

கைது

அப்போது அங்கு வந்த சித்திரைச்சாமி அவர்களை வழி மறித்து ரூ.1 லட்சமும் அதற்குரிய வட்டியையும் உடனே தரவில்லை என்றால் குடும்பத்தோடு கொன்று எரித்து விடுவேன் என கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்து கபீபா அளித்த புகாரின் அடிப்படையில் திருப்புல்லாணி போலீசார் அதிக வட்டி வசூலிக்கும் சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சித்திரைச்சாமியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்