தூத்துக்குடியில்3-வது புத்தக திருவிழா ஏற்பாடுகள்: கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு

தூத்துக்குடியில்3-வது புத்தக திருவிழா ஏற்பாடுகளை கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் ஆய்வு நடத்தினர்.

Update: 2022-11-17 18:45 GMT

தூத்துக்குடியில் நடைபெற உள்ள 3-வது புத்தக திருவிழா முன்னேற்பாடு பணிகளை கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

புத்தக திருவிழா

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் 3-வது புத்தகத் திருவிழா வரும் 22-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை தூத்துக்குடி ஏ.வி.எம் கமலவேல் மகாலில் நடக்கிறது. இதனை முன்னிட்டு புத்தக திருவிழா நடைபெற உள்ள ஏ.வி.எம். கமலவேல் மகாலை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் கூறும் போது, தூத்துக்குடியில் நடைபெறும் புத்தக திருவிழாவில் 70-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்படுகின்றன. புத்தக திருவிழாவில் தினமும் தமிழகத்தில் உள்ள சிறந்த எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் தங்களது எழுத்து மற்றும் வாசிப்பு அனுபவம் மற்றும் தங்களது பயணங்களை பகிர்ந்து கொள்கின்றனர். எழுத்தாளர்கள் எஸ்.ராமகிருஷ்ணன், சு.வெங்கடேசன், பாலகிருஷ்ணன், சோ.தர்மன், பர்வீன் சுல்தானா, கவிதா முரளிதரன், பூமணி போன்ற பல்வேறு எழுத்தாளர்கள் பங்கேற்க உள்ளனர். மேலும் ஒவ்வொரு நாளும் பள்ளி மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. தினமும் பகலில் பள்ளி மாணவர்களுக்கான கலை இலக்கிய போட்டிகள் நடைபெறும். இந்த புத்தக திருவிழாவில் பொதுமக்கள், மாணவ, மாணவிகள், இளைஞர்கள் அனைவரும் பங்கேற்று புத்தகங்களை வாங்கி பயன்பெறலாம் என்று கூறினார்.

ஆய்வின் போது, மேயர் ஜெகன் பெரியசாமி, கலெக்டர் செந்தில்ராஜ், மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழிப்புணர்வு மினி மாரத்தான்

தூத்துக்குடி இந்திய தொழில் கூட்டமைப்பும் மற்றும் தூத்துக்குடி யங் இந்தியன் சார்பில், ராஜாஜி பூங்காவில், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்காக புகார் தெரிவிக்கும் உதவி எண் 1098 குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மினி மராத்தான் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு அமைச்சர தலைமை தாங்கினார். மேயர், மாவட்ட கலெக்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு மினி மாரத்தானை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி உதவி கலெக்டர் கவுரவ்குமார், முதன்மை கல்வி அதிகாரி பால தண்டாயுதபாணி, இந்திய தொழில் கூட்டமைப்பு துணைத்தலைவர் வெயிலா கே.ராஜா, மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை தூத்துக்குடி யங் இந்தியன் தலைவர் சில்வியா ஜான், துணைத்தலைவர் ராஜேஷ் தில்லை ஆகியோர் செய்து இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்