ஆதார் இணைப்புடன் வங்கி கணக்கு தொடங்க தபால் நிலையங்களில் ஏற்பாடு
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற ஆதார் இணைப்புடன் வங்கி கணக்கு தொடங்க தபால் நிலையங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக திருப்பத்தூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் மாதேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திருப்பத்தூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் மு.மாதேஸ்வரன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
வங்கி கணக்கு
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற தகுதியுள்ள பயனாளிகளுக்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு அவசியம் என்பதால், தகுதியுள்ள பயனாளிகள் அருகில் உள்ள அஞ்சலகங்கள், தபால்காரர், கிராம அஞ்சல் ஊழியரை அணுகி, ஆதார் இணைப்புடன் கூடிய இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்கி பயன்பெறலாம்.
தபால்காரர் மற்றும் கிராம அஞ்சல் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட்போன் மற்றும் பயோ மெட்ரிக் சாதனத்தின் மூலம், பயனாளிகள் தங்களின் ஆதார் மற்றும் மொபைல் எண்ணை மட்டும் பயன்படுத்தி விரல்ரேகை மூலம் ஒருசில நிமிடங்களில் ஆதார் இணைப்புடன் கூடிய இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்க முடியும். இந்த கணக்கிற்கு இருப்புத் தொகை எதுவும் கிடையாது.
இல்லத்திலேயே...
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற தகுதியுள்ள பயனாளிகள், மாதாந்திர உரிமைத் தொகையை அருகில் உள்ள அஞ்சலகங்களிலும், டோர் ஸ்டெப் பேங்கிங் என்ற சிறப்பு சேவை மூலமும் தங்கள் இல்லத்திலேயே தபால்காரர் மூலம் பெற்றுக்கொள்ளமுடியும்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறும் பயனாளிகள் மட்டுமில்லாமல், நூறுநாள் வேலைத்திட்ட பயனாளிகள், கிசான் திட்ட பயனாளிகள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, தொழிலாளர் நலவாரிய உதவித்தொகை பெறும் பயனாளிகளும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்கி பயன் பெறலாம்.
எனவே திருப்பத்தூர் மாவட்ட பயனாளிகள் அனைவரும் மாவட்டத்திலுள்ள அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் செயல்படுத்தப்பட்டு வரும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி சேவையை பயன்படுத்தி, தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு தொடங்கி பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.