ஈரோடு கலெக்டர் அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

இந்து அமைப்பை தடை விதிக்கக்கோரி ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-06-04 21:53 GMT

ஈரோடு

இந்து அமைப்பை தடை விதிக்கக்கோரி ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திடீர் ஆர்ப்பாட்டம்

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே கன்னிமார்காடு பகுதியில் சுமார் 300 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். அங்கு உள்ளவர்களுக்கு அரசின் சார்பில் வீட்டு மனை பட்டா, இலவச வீடுகள் வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இதுதொடர்பாக அவர்கள் அமைச்சர் சு.முத்துச்சாமி, மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆகியோரிடம் கோரிக்கை மனுக்களை கொடுத்து உள்ளனர்.

இந்தநிலையில் இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் பிற மதத்தினருக்கு வீடு, வீட்டுமனை பட்டா வழங்க கூடாது என்று வலியுறுத்தி வருகிறார்கள். இதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் சிறுத்தை வள்ளுவன் தலைமையில் மாவட்ட துணைச்செயலாளர் அக்பர்அலி, மாநகர செயலாளர் அம்ஜத்கான் மற்றும் கன்னிமார்காடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று காலை திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அமைச்சர் பேச்சுவார்த்தை

இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து அமைப்புக்கு எதிராகவும், அந்த அமைப்பை தடை விதிக்க வேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு சூரம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயா மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

இதற்கிடையே கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துச்சாமி காரில் ஏறி வெளியே வந்தார். அவர் நுழைவு வாயில் அருகில் வந்ததும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமைச்சரிடம் தங்களது கோரிக்கை மனுவை கொடுத்தனர். அப்போது அவர்களிடம் அமைச்சர் சு.முத்துசாமி காரில் இருந்து இறங்கி சென்று பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை கேட்டறிந்தார். அவரிடம் பொதுமக்கள் கூறுகையில், "இந்து மதத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்றும், மற்ற மதத்தை சேர்ந்தவர்களுக்கோ, மதம் மாறியவர்களுக்கோ பட்டா வழங்கக்கூடாது என்றும் இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் வலியுறுத்தி உள்ளனர். எங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்", என்றனர். அதற்கு அமைச்சர் சு.முத்துசாமி, "மதம் பார்த்து பட்டா, வீடுகள் வழங்கப்படுவதில்லை. தகுதியான அனைவருக்கும் 3 மாதங்களில் வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார். இதை ஏற்று பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

ஈரோடு கலெக்டர் அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உள்பட பொதுமக்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்