ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: ரவுடி சம்போ செந்திலின் தற்போதைய புகைப்படம் சிக்கியது

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடி சம்போ செந்திலின் தற்போதைய புகைப்படம் போலீசாரிடம் சிக்கி உள்ளது.

Update: 2024-08-24 05:50 GMT

சென்னை,

பகுஜன் சமாஜ் கட்சி தமிழ்நாடு மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பிரபல ரவுடிகளான சம்போ செந்தில், சீசிங் ராஜா உள்ளிட்ட 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர். பல்வேறு மாநிலங்களில் தேடுதல் வேட்டை மேற்கொண்டும் அவர்கள் இன்னும் சிக்காமல் உள்ளனர்.

இதனிடையே சம்போ செந்திலுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த கிருஷ்ணகுமார் (எ) மொட்டை கிருஷ்ணன் என்ற வழக்கறிஞரையும் போலீசார் தேடி வருகின்றனர். அவர் ஆம்ஸ்ட்ராங் கொலையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு பண உதவி செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணனுக்கு போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

இந்த சூழலில் சென்னை அடையாறில் வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணனுடன் சம்போ செந்தில் தங்கியிருந்ததாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து அதுதொடர்பான விசாரணையில் இறங்கினர். மொட்டை கிருஷ்ணனுடன் சம்போ செந்தில் தங்கியிருந்ததாக கூறப்படும் ஹோட்டல் மேனேஜரிடமும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் சம்போ செந்திலின் முன்னாள் மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, 2020-ம் ஆண்டு வரை இவரிடம் சம்போ செந்தில் பேசியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவரது மனைவியிடம் இருந்து சம்போ செந்திலின் தற்போதைய உருவம் குறித்த புகைப்படத்தை போலீசார் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 10 வருடத்திற்கு முந்தைய புகைப்படத்தை வைத்து தனிப்படை போலீசார் சாம்போ செந்திலை தேடி வந்தநிலையில் தற்போது போலீசாருக்கு புதிய உருவம் தொடர்பான புகைப்படம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்