ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: கைதான மேலும் 3 பேர் சிறையில் அடைப்பு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2024-07-08 06:45 GMT

சென்னை,

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங் (52). இவர் கடந்த 5ம் தேதி இரவு பெரம்பூர் வேணுகோபால் சாமி கோவில் தெருவில் உள்ள அவரது வீட்டின் முன்பு மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

உணவு வினியோகம் செய்யும் ஊழியர்கள் போல் உடை அணிந்து வந்த கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பியது. கொலையாளிகள் தப்பிச்செல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதை அடிப்படையாக வைத்து செம்பியம் போலீசார் 10 தனிப்படைகளை அமைத்து துப்பு துலக்கினர்.

முதல்கட்டமாக கொலை தொடர்பாக மறைந்த பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி ராணிப்பேட்டை மாவட்டம், காட்பாடி பொன்னை பகுதியைச் சேர்ந்த பொன்னை பாலு (வயது 39), அவரது கூட்டாளிகள் அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ் (22), பெரம்பூர் பொன்னுசாமி நகர், 3-வது தெருவை சேர்ந்த திருமலை (45), திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டையை சேர்ந்த மணிவண்ணன் (26), குன்றத்தூர் திருவேங்கடம் (33), திருநின்றவூர் ராமு என்ற வினோத் (38), அதே பகுதியை சேர்ந்த அருள் (33), செல்வராஜ் (48) ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

பின்னர், அவர்களை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் இரவு மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். ஆக இந்த கொலை வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்குப்பழியாக ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. மேலும், கொலைக்கு அரசியல் காரணங்கள் எதுவும் இல்லை என போலீசார் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

ஆனால், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. அவர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். உண்மைநிலை வெளியே வர வேண்டும் என்றால் சி பி ஐ விசாரணைக்கு ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை மாற்ற வேண்டும் என அவருடைய ஆதரவாளர்கள், பல்வேறு கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கோகுல், விஜய், சிவசக்தி ஆகியோருக்கு ஜூலை 19ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. எழும்பூர் நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து 3 பேரும் பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்