ஆம்ஸ்ட்ராங் படுகொலை - பகுஜன் சமாஜ் கட்சியினர் சாலை மறியல்

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார்.

Update: 2024-07-05 18:01 GMT

சென்னை,

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங். சென்னை பெரம்பூரில் இவரது வீடு உள்ளது. இவர் இன்று தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட மர்மநபர்கள் ஆம்ஸ்ட்ராங்கை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர். இதில் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஆம்ஸ்ட்ராங்கை அருகில் இருந்தவர்கள் மீட்டு சென்னை கிரீன்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்தார்.

இதனையடுத்து சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு ஆம்ஸ்ட்ராங் உடல் கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு உடற்கூராய்விற்காக ஆம்ஸ்ட்ராங் உடல் வைக்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவமனையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த படுகொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும், 5 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் உடலை பார்க்க அனுமதிக்குமாறு போலீசாருடன் பகுஜன் சமாஜ் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு போலீசார் மறுப்பு தெரிவிக்கவே பூந்தமல்லி நெடுஞ்சாலையில், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முன்பு அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கொலையாளிகளை விரைந்து பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் அவர்கள் கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

சுமார் 200-க்கும் மேற்பட்டோர் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்துவதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில், அரசியல் கட்சியின் மாநிலத் தலைவர் ஒருவர் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்