ஏரியூர்:-
பணிகள் முடிந்து 2 மாதங்கள் ஆகிறது. திறப்பு விழாவுக்கு ஏங்கும் ஏரியூர் புதிய பஸ் நிலையத்தை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
100-க்கும் மேற்பட்ட கிராமங்கள்
தர்மபுரி மாவட்டத்தில் முக்கிய ஊர்களில் ஒன்றான ஏரியூர், மாவட்டத்தின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. ஊராட்சி ஒன்றிய தலைமை இடமான ஏரியூர் பகுதியில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. குறிப்பாக மலை கிராமங்கள் அதிக அளவில் உள்ளன. ஏரியூர் பகுதியில் உள்ள 100- க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் விவசாயம், வணிகம், மருத்துவம், கல்வி சார்ந்த தேவைகளுக்கு ஏரியூருக்கு வந்து செல்ல வேண்டும்.
தினமும் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஏரியூர் பகுதிக்கு வந்து செல்கிறார்கள். இவ்வாறு வந்து செல்ல பஸ்களையே பொதுமக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். ஏரியூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் சேலம், தர்மபுரி, பென்னாகரம், பாலக்கோடு, மேட்டூர் உள்பட பல்வேறு ஊர்களுக்கு வேலைக்கு செல்கிறார்கள்.
புதிய பஸ் நிலையம்
ஏரியூரில் இருந்து சேலம், தர்மபுரி, பென்னாகரம், பாலக்கோடு, மேட்டூர், மேச்சேரி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தினமும் 30-க்கும் மேற்பட்ட பஸ்கள் ஏரியூருக்கு வந்து செல்கின்றன. முக்கிய போக்குவரத்து மையமான ஏரியூரில் பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் கடந்த 2019- ம் ஆண்டு ரூ.3 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.
இந்த பணி தொடங்கப்பட்டு 3 ஆண்டுகள் ஆன நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு புதிய பஸ் நிலைய கட்டுமான பணி முடிக்கப்பட்டு விட்டது. இந்த புதிய பஸ் நிலையத்தை விரைவாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இது குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
விரைவாக திறக்க வேண்டும்
ஏரியூரைச் சேர்ந்த சரவணன்:-
தினமும் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வந்து செல்லும் ஏரியூரில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முழுமையாக முடிவடைந்து விட்டது. இங்கு வந்து செல்லும் பொது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்த தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டுவிட்டன. இருந்த போதிலும் இந்த பஸ் நிலையம் இன்னும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படவில்லை. எனவே பொதுமக்கள், பயணிகள் நலன் கருதி இந்த பஸ் நிலையத்தை திறக்க விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போக்குவரத்து நெரிசல்
நெருப்பூரான் கொட்டாயை சேர்ந்த ரவி:-
ஏரியூர் நகர பகுதியில் சாலைகளில் ஏற்கனவே வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் புதிய பஸ் நிலையம் இதுவரை பயன்பாட்டிற்கு வராததால் பஸ் நிலையம் அருகே சாலைகளிலேயே பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கி செல்கிறார்கள். இதன் காரணமாக காலை மற்றும் மாலை நேரங்களில் அதிக வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. புதிய பஸ் நிலையம் பயன்பாட்டிற்கு வந்தால் இந்த போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும். பல்வேறு ஊர்களில் இருந்து ஏரியூருக்கு கூடுதலாக அரசு மற்றும் தனியார் பஸ்களை இயக்க வாய்ப்பு ஏற்படும். எனவே புதிய பஸ் நிலையத்தை விரைவாக பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
சிரமப்படும் பயணிகள்
செல்லமுடியைச் சேர்ந்த முத்துசாமி:-
ஏரியூரில் கட்டப்பட்டுள்ள புதிய பஸ் நிலையம் பயன்பாட்டிற்கு வராததால் பஸ் நிலையம் அருகே சாலைகளில் பஸ்களுக்கு காத்திருக்கும் பயணிகள், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். மழை பெய்யும் போது சாலையோர கடைகளில் ஒதுங்கி நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள புதிய பஸ் நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.