உயிர் காக்கும் மருந்துகள் கூட இல்லாத அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை
அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உயிர் காக்கும் மருந்துகள் கூட இல்லையென பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மருந்து தட்டுப்பாடு
அரியலூரில் அரசு மருத்துவமனையானது அரியலூர் மாவட்டம் உருவாகிய பிறகு மாவட்ட தலைமை மருத்துவமனை என்ற பெயரோடு இயங்கியது. பின்னர் அரியலூரில் அரசு மருத்துவக்கல்லூரி தொடங்கியபோது அரியலூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. பெயர்தான் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆனால் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டவர்கள் நிலைமையோ உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு இறைவனை வேண்டிக்கொண்டு உள்ளனர்.
அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுமார் 120 டாக்டர்கள் பணிபுரிந்து வருகின்றனர் அவர்களுக்கு தேவையான மருந்துகள் முதலில் செவிலியர் மூலம் இன்டெண்ட் போடப்பட்டு பின்னர் அத்துறையின் தலைமை மருத்துவரிடம் அனுமதி பெறப்பட்டு டீனுக்கு அனுப்பப்படும். தேவையான மருந்துகள் அனைத்தும் அலுவலக கண்காணிப்பாளர் மூலம் பெறப்படுவது வழக்கமாக இருந்தது. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் ஆப்ரேஷன் தியேட்டரில் உயிர் காக்கும் மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை மயக்க மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகள் கூட தட்டுப்பாட்டு ஏற்பட்டுள்ளதாக நோயாளிகள் தெரிவிக்கின்றனர்.
ஒரு கோடி ரூபாய் பாக்கி
குறிப்பாக புபி வேக்சின், சைலோ கார்டு, பாராசிட்டமல், இன்புலுஷன் ஆர்.எல்.எம்.எஸ். எனப்படும் குளுக்கோஸ் அறுவை சிகிச்சை அரங்கில் பயன்படுத்தப்படும் மாஸ்க், கேப் உள்ளிட்ட பெரும்பாலான மருந்துகள் தேவைப்படும் அளவுக்கு கிடைப்பதில்லையாம். இதனால் சில நேரங்களில் அறுவை சிகிச்சை கூட தள்ளி வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. மருந்துகள் தனியாரிடமிருந்து வாங்கிய அளவில் சுமார் ஒரு கோடி ரூபாய் பாக்கி உள்ளது. இதனால் தனியாரிடமும் மருந்து கொள்முதல் செய்ய முடியவில்லை. முதல்-அமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் மருத்துவமனையில் சுமார் ஒரு கோடி ரூபாய் அளவிற்கு பணம் இருந்தும் அதிகாரிகளின் அலட்சியத்தால் அரியலூர் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருந்து பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
எழுதி வாங்கிய டாக்டர்கள்
கடந்த 4-ந் சஞ்சனா சரணி என்ற 6 வயது சிறுமிக்கு இரவில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டபோது போதுமான மருந்துகள் இருப்பில் இல்லை எனக்கூறியுள்ளனர். மேலும் உள்நோயாளியாக இருக்கக்கூறிய போது மருந்துகள் இல்லாமல் எவ்வாறு இருக்க முடியும் என பெற்றோர் கூறிய போது பெற்றோர்களிடம், நாங்கள் (பெற்றோர்கள்) உள்நோயாளியாக இருக்க விருப்பமில்லை என எழுதி டாக்டர்கள் வாங்கியுள்ளனர். இவரது புறநோய்யாளி ரசீது எண் 8019 ஆகும். இக்கு குழந்தையின் தந்தை கஜேந்திரன் வக்கீல் ஆவார். பெரும்பாலான மக்களிடமும், டாக்டர்களிடமும் இப்பிரச்சினை தீரும் நிம்மதியாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். குறிப்பாக அலுவலக கண்காணிப்பாளர் பக்கமே அனைவரின் குற்றசாட்டும் உள்ளது.
வெளியே வாங்கி வருமாறு...
மேலும் அரியலூர் மாவட்டம், கல்லூர் கிராமத்தை சேர்ந்த இன்ஜின் துரை. இவருக்கு கடந்த 4-ந் தேதி மயக்கம் ஏற்பட்டு சுயநினைவு இல்லாமல் கீழே விழுந்து விட்டார். உடனடியாக இவரை அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவரது மருமகன் மகேந்திரன் சேர்த்துள்ளார். அப்போது மருந்துகளை வெளியே வாங்கி வருமாறு கூறியுள்ளார்கள்.
சிகிச்சை முடிந்து வெளியே வரும் போது சீட்டில் எழுதி கொடுத்த 6 மருந்துகளில் இரண்டை வெளியே வாங்கி செல்லுமாறு கூறியுள்ளனர். இதுகுறித்து அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டாக்டர்களிடம் கேட்டபோது, அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனைத்து மருந்துகளும் போதுமான அளவு இருப்பு உள்ளதாக தெரிவித்தனர்.