ஓட்டலில் சாப்பிடும்போது தகராறு: கோஷ்டி மோதலில் வாலிபர் அடித்துக்கொலை - பிறந்த நாள் விருந்தில் சோகம்
நண்பர்களுக்கு பிறந்த நாள் விருந்து கொடுத்தபோது, ஓட்டலில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.;
சென்னையை அடுத்த செங்குன்றம் பாடியநல்லூர், பி.டி.மூர்த்தி நகரை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 30). இவருக்கு கடந்த 8 மாதத்துக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. செந்தில்குமார், அதே பகுதியில் துணிக்கடை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இரவு செந்தில்குமார் தனது பிறந்த நாளையொட்டி நண்பர்களுக்கு விருந்து வைக்க முடிவு செய்தார். இதற்காக அவர் நண்பர்களுடன் சென்னை அண்ணாநகர் 2-வது அவென்யூவில் உள்ள உணவு வளாகத்துக்கு வந்தார்.
நள்ளிரவு 12 மணியளவில் ஓட்டலிலேயே நண்பர்கள் கேக் வெட்டி செந்தில்குமார் பிறந்தநாளை கொண்டாடினர். பின்னர் நண்பர்கள் அனைவருக்கும் பிரியாணி விருந்து கொடுத்தார்.
அப்போது அதே ஓட்டலுக்கு தனது நண்பர்களுடன் சாப்பிட வந்த டி.பி.சத்திரத்தைச் சேர்ந்த பிரகாஷ் (28) என்பவருக்கும் செந்தில் குமார் தரப்புக்கும் தகராறு ஏற்பட்டது. இருதரப்பினருக்கும் வாக்குவாதம் முற்றி கோஷ்டி மோதலாக மாறியது. இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டதாக தெரிகிறது. இதில் படுகாயம் அடைந்த செந்தில்குமாரை அவரது நண்பர்கள் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி செந்தில்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது தெரியாமல் பிரகாஷ் மற்றும் அவரது நண்பர்களான மணிமாறன், ரோஷன் ஆகியோர் செந்தில்குமார் மற்றும் அவரது நண்பர்கள் தங்களை தாக்கி விட்டதாக திருமங்கலம் போலீசில் புகார் அளிக்க சென்றனர். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தியபோது, பிரகாஷ் நண்பர்கள் தாக்கியதில் செந்தில்குமார் இறந்துவிட்டது தெரியவந்தது.
அப்போது பிரகாஷ், தான் மட்டுமே செந்தில்குமாரை தாக்கியதாகவும், இதில் தனது நண்பர்களுக்கு சம்பந்தம் இல்லை என்றும் கூறினார். இதையடுத்து பிரகாசை போலீசார் கைது செய்தனர். மணிமாறன் மற்றும் ரோஷனை விசாரித்துவிட்டு அனுப்பி வைத்தனர்.
இதுபற்றி கொலையான செந்தில்குமாரின் நண்பர் மொய்தீன் கொடுத்த புகாரின் பேரில் திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைதான பிரகாசை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.