டாஸ்மாக் கடையில் 'ஓசி'க்கு மதுபானம் கேட்டு தகராறு; 3 பேருக்கு வலைவீச்சு
கம்பத்தில் டாஸ்மாக் கடையில் ‘ஓசி’க்கு மதுபானம் கேட்டு தகராறு செய்த 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
கம்பத்தில் டாஸ்மாக் கடையில் 'ஓசி'க்கு மதுபானம் கேட்டு தகராறு செய்த 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுபானம் கேட்டு தகராறு
கம்பம் மின்வாரிய அலுவலகம் அருகே டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் விற்பனையாளர்களாக பழனிசாமி (வயது 52), முருகன் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை இந்த கடைக்கு கம்பத்தை சேர்ந்த 3 வாலிபர்கள் வந்தனர். அப்போது அவர்கள் கடை விற்பனையாளர்களிடம் பணம் கொடுக்காமல் 'ஓசி'க்கு மதுபானம் கேட்டனர். அப்போது விற்பனையாளர்கள் தரமுடியாது என்று கூறினர்.
இதனால் 3 பேரும் சேர்ந்து, கடை விற்பனையாளர்களை அவதூறாக பேசி தகராறு செய்தனர். மேலும் அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்கள், டாஸ்மாக் கடையின் இரும்பு கேட்டை உடைக்க முயற்சி செய்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.
3 பேருக்கு வலைவீச்சு
இதுகுறித்து கடை விற்பனையாளர் பழனிசாமி, கம்பம் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், டாஸ்மாக் கடையில் தகராறு செய்த நபர்கள் கம்பத்தை சேர்ந்த பங்கேஷ்குமார், விசுவநாதன், ரகு ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான பங்கேஷ்குமார் உள்பட 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.