ஓடும் அரசு பஸ்சில் பள்ளி மாணவர்களிடையே திடீர் வாக்குவாதம்

உளுந்தூர்பேட்டை அருகே ஓடும் அரசு பஸ்சில் பள்ளி மாணவர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மோதல் உருவாகும் சூழ்நிலை உருவானதால் பஸ்சை டிரைவர் நடுவழியில் நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது;

Update:2023-02-18 00:15 IST

உளுந்தூர்பேட்டை

அரசு பஸ்

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிளாப்பாளையம் கிராமத்தில் இருந்து ஆதனூர், பாச்சாப்பாளையம் வழியாக செல்லும் அரசு பஸ் உளுந்தூர்பேட்டை நோக்கி வந்து கொண்டிருந்தது. பஸ்சில் ஆதனூர், கிளாப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பள்ளி மாணவர-மாணவிகள் பயணம் செய்தனர். இதனால் பயணிகள் கூட்டம் அதிகரித்து நெரிசல் ஏற்ப்பட்டது. இதில் வழியில் டிரைவர் திடீரென பிரேக் பிடித்தபோது நிலை தடுமாறி மாணவிகள் மீது ஆதனூா் கிராமத்தை சேர்ந்த மாணவர்களின் கை பட்டதாகவும், சில மாணவர்கள் சாய்ந்ததாகவும் கூறப்படுகிறது.

மாணவர்கள் வாக்குவாதம்

இதை அறிந்த அந்த மாணவிகளின் கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் ஆதனூர் கிராமத்தை சேர்ந்த மாணவர்களிடம் தட்டிக் கேட்டனார். அப்போது திடீரென இரு கிராமத்தை சேர்ந்த மாணவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் அவர்கள் மோதிக்கொள்ளும் சூழ் நிலை உருவானது.

உடனே டிரைவர் மற்றும் கண்டக்டர் இருவரும் பிரச்சினையில் ஈடுபடும் மாணவர்களை கீழே இறக்கி விட்டுவிடுவதாக எச்சரித்தனர். ஆனால் அதை மாணவர்கள் காதில் வாங்கிகொள்ளலாமல் தொடர்ந்து ஒருவருக்கொருவா் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தனர்.

பஸ் நடுவழியில் நிறுத்தம்

இதையடுத்து டிரைவர் பஸ்சை நடு வழியிலேயே நிறுத்தினார். பஸ்சில் இருந்த பணிகள் சிலர் மாணவர்களை சமாதானம் செய்ய முயன்றனர். ஆனால் அவர்கள் கேட்காததால் இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் அங்கு விரைந்து வந்து இரு கிராமங்களை சேர்ந்த மாணவர்களையும் சமாதானம் செய்தனர்.

தொடா்ந்து அரசு பஸ் அங்கிருந்து உளுந்தூர்பேட்டைக்கு புறப்பட்டு சென்றது. மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் அரசு பஸ்சை டிரைவர் நடுவழியில் நிறுத்திய சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்