அவினாசியை சேர்ந்த மணிவண்ணன் மகள் சத்தியஸ்ரீ (வயது 21) திருப்பூர் குமார்நகர் 60 அடி ரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பணியாற்றி வந்தார். கடந்த 1-ந்தேதி காலை சத்தியஸ்ரீ ஆஸ்பத்திரியில் இருந்தபோது அங்கு வந்த வாலிபர் ஒருவர் திடீரென சத்தியஸ்ரீயை கத்தியால் குத்தியதுடன், கழுத்தையும் அறுத்தார். மேலும் அந்த வாலிபர் கத்தியால் தனது கழுத்தையும் அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயற்சித்தார். இதையடுத்து இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் சத்தியஸ்ரீ ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர் தெரிவித்தனர். அந்த வாலிபர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
திருப்பூர் வடக்கு போலீசார் நடத்திய விசாரணையில் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலை சேர்ந்த நரேந்திரனுக்கும் (21) சத்தியஸ்ரீக்கும் முகநூல் மூலமாக காதல் ஏற்பட்டது தெரிய வந்தது. நரேந்திரன் கோவை சரவணம்பட்டியில் தங்கி கேட்டரிங் தொழில் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் நரேந்திரனுக்கும், சத்தியஸ்ரீக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில்தான் சம்பவத்தன்று திருப்பூர் வந்த நரேந்திரன் சத்தியஸ்ரீயை கொலை செய்து, தானும் தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்துள்ளது.இந்த நிலையில் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 5 நாட்களாக நரேந்திரன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அவரை திருப்பூர் வடக்கு போலீசார் கைது கைது செய்து திருப்பூருக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவரிடம் கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து அவர் திருப்பூர் ஜே.எம்.1 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.