வருமானவரி சோதனையில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்

கட்டுமான நிறுவனங்களில் 3 நாட்கள் நடந்த வருமானவரி சோதனையில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டன

Update: 2023-09-16 19:45 GMT

கோவை வடவள்ளியில் உள்ள கட்டுமான நிறுவனம், அந்த நிறுவன இயக்குனர்கள் உள்பட 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் கடந்த 14-ந் தேதி வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். வருமானவரி ஏய்ப்பு நடந்ததாக வந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.


இந்த சோதனை 3-வது நாளாக நேற்று மதியம் வரை நீடித்தது. அப்போது கட்டுக்கட்டாக பணம், தங்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவை அனைத்தையும் வருமானவரித்துறை அதிகாரிகள் கணக்கெடுத்தனர்.


இதையடுத்து 7 பேர் கொண்ட அதிகாரிகள் குழு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் பணம் இருந்த பெட்டியை ஒரு காரில் எடுத்து கோவை ரெயில் நிலையம் அருகே உள்ள ஸ்டேட் வங்கிக்கு கொண்டு வந்தனர். அதை, வங்கி கருவூலத்தில் ஒப்படைத்தனர். அதற்கான ரசீதையும் பெற்றுக்கொண்டனர்.


முதற்கட்டமாக வருமானவரித் துறை சார்பில் கருவூலத்தில் ரூ.4 கோடியே 62 லட்சம் ஒப்படைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் எவ்வளவு பணம் ஒப்படைக்கப்பட்டது? பறிமுதல் செய்யப்பட்ட பணம், தங்கம் எவ்வளவு? என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக எவ்வித தகவலும் வெளியிடப்பட வில்லை.


அதைத்தொடர்ந்து அந்த நிறுவனங்களில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை சரிபார்க்கும் பணியில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.


அந்த பணி முடிந்த பின்னர், எவ்வளவு வருமானம் வந்தது? அதற்கு ஏன் வருமானவரி செலுத்த வில்லை? இந்த பணம் எந்தெந்த வகையில் வந்தது? அதற்கு ஆதாரங்கள் என்ன? என்பது குறித்த தகவலையும் பெற உள்ளதாக வருமான வரித் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்