கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 19 மையங்களில்முதல்-அமைச்சரின் திறனாய்வு தேர்வு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 19 மையங்களில் நடந்த முதல்-அமைச்சரின் திறனாய்வு தேர்வை 5 ஆயிரத்து 277 மாணவ, மாணவிகள் எழுதினர்.

Update: 2023-10-08 18:44 GMT

திறனாய்வு தேர்வு

தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில், முதல்-அமைச்சரின் திறனாய்வு தேர்வு இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், பிளஸ்-2 முதல் பட்டப்படிப்பு வரை ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் கல்வி உதவித்தொகையாக வழங்கப்பட உள்ளது. அரசு பள்ளிகளில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு, மத்திய அரசின் உதவித்தொகை பெறுவதற்கான திறனாய்வு தேர்வு ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது.

இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ, மாணவிகளுக்கு 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாதம் ரூ.1000 வீதம் ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் உதவித்தொகையாக மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உயர்கல்வி படிப்பதை ஊக்கப்படுத்தும் வகையில், தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் முதல்-அமைச்சரின் திறனாய்வு தேர்வு தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டது.

அதிகாரிகள் ஆய்வு

அதன்படி, மாவட்டத்தில் கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் ஆகிய 2 கல்வி மாவட்டங்களில் இந்த தேர்வு நடந்தது. கிருஷ்ணகிரி கல்வி மாவட்டத்தில் 10 மையங்களில் நடந்த தேர்வை மொத்தம் 2,966 மாணவ, மாணவிகள் எழுதினர். தேர்விற்கு விண்ணப்பித்த 3,233 பேரில் 267 மாணவ, மாணவிகள் இந்த தேர்வை எழுதவில்லை.

இதே போல் ஓசூர் கல்வி மாவட்டத்தில் 9 மையங்களில் மொத்தம் 2,311 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். தேர்விற்கு விண்ணப்பித்த 2,523 பேரில் 212 மாணவ, மாணவிகள் இந்த தேர்வை எழுதவில்லை. அதன்படி, கிருஷ்ணகிரி வருவாய் மாவட்டத்தில் மொத்தம் 19 மையங்களில் நடந்த இந்த தேர்வை 5 ஆயிரத்து 277 மாணவ, மாணவிகள் எழுதினர். 479 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதவில்லை. இந்த தேர்வை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமையில் கல்வி அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்