நடுநிலைப்பள்ளிகளில் அனைத்து பாடங்களுக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்
நடுநிலைப்பள்ளிகளில் அனைத்து பாடங்களுக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.;
சென்னை,
தமிழக சட்டசபையில் பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை மீது எம்.எல்.ஏ.க்கள் நேற்று விவாதித்தனர். அவர்களுக்கு பதில் அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்ட அந்த துறைக்கான அறிவிப்புகள் வருமாறு:-
* 2 ஆயிரத்து 996 அரசு நடுநிலைப்பள்ளிகள், 540 அரசு உயர்நிலைப்பள்ளிகள் ஆகியவற்றில் உயர் தொழில்நுட்பக் கணினி ஆய்வகங்கள் ரூ.175 கோடி செலவில் அமைக்கப்படும்.
* 7 ஆயிரத்து 500 அரசு தொடக்கப்பள்ளிகளில் ரூ.150 கோடி மதிப்பீட்டில் திறன் வகுப்பறைகள் உருவாக்கப்படும்.
* 25 மாவட்டங்களில் செயல்பட்டுவரும் மாதிரி பள்ளிகள் மேலும் 13 மாவட்டங்களுக்கு விரிவாக்கம் செய்யப்படும். அனைத்து மாவட்டங்களிலும் தலா ஒரு மாதிரி பள்ளி என்ற நிலை உருவாக்கப்படும்.
* மாணவர்களிடையே வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க மாபெரும் வாசிப்பு இயக்கம் செயல்படுத்தப்படும்.
* ஒவ்வொரு மாவட்டத்திலும் 2 விளையாட்டு சிறப்பு பள்ளிகள் உருவாக்கப்படும்.
பட்டதாரி ஆசிரியர் நியமனம்
* வேலைவாய்ப்புக்காக தமிழகத்துக்கு இடம்பெயர்ந்து வரும் பிற மாநில தொழிலாளர்களின் குழந்தைகள் தங்கள் தாய்மொழியுடன் தங்குதடையின்றி தமிழில் பேசவும், எழுதவும் ஏதுவாக தமிழ்மொழி கற்போம் இயக்கம் தொடங்கப்படும்.
* மாணவர்களின் கலை, இலக்கியம், விளையாட்டு போன்ற திறனை ஆசிரியர், பெற்றோர் முன்னிலையில் வெளிப்படுத்தும் வாய்ப்பாக அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆண்டுவிழா நடத்தப்படும்.
* தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு நிர்வாகத்திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும்.
* அனைத்து பாடங்களுக்கும் பட்டதாரி ஆசிரியர் என்றவகையில், 6 முதல் 8 வகுப்புகளில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்களை கொண்டு செயல்படும் நடுநிலைப்பள்ளிகளில் மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்த, ஒவ்வொரு பாடத்துக்கும் ஒருவர் என குறைந்தபட்சம் 5 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வழங்கப்படும்.
* அரசு பள்ளிகளில் செயல்பட்டுவரும் எண்ணும் எழுத்தும் திட்டத்தை அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் செயல்படுத்த கற்றல், கற்பித்தல் உபகரணங்கள் வழங்கப்படும்.
வாழ்வியல் திறன் பயிற்சி
* ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமனம் செய்யப்படும் ஆசிரியர்களுக்கு பணியில் சேரும் முன்பு 15 நாட்கள் கற்றல், கற்பித்தல் மற்றும் அடிப்படை நிர்வாக பயிற்சி வழங்கப்படும்.
* அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகளுக்கு தேவையான ஆய்வகங்கள் தரம் உயர்த்தப்படும்.
* வரலாறு, வணிகவியல் போன்ற பாடப்பிரிவுகள் இல்லாத அரசு மேல்நிலைப்பள்ளிகளில் படிப்படியாக 3-ம் பாடப்பிரிவு உருவாக்கப்படும்.
* உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் இல்லாத அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படுவதுடன், விளையாட்டு மற்றும் உடலியல் சார்ந்த செயல்பாட்டுக்கான கலைத்திட்டம், பாடத்திட்டம் உருவாக்கப்படும்.
* அனைத்து அரசு பள்ளிகளிலும் கல்வியாண்டின் தொடக்கத்தில் இணையப் பாதுகாப்பு, வெறுப்பை வளர்க்கும் செய்திகள் மற்றும் தவறான தகவல்களை கண்டறிதல் ஆகியவை குறித்த விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்படும். ஆசிரியர், மாணவர்களுக்கு இதுகுறித்த பயிற்சிகள் வழங்கப்படும்.
* அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு மனநலம் மற்றும் வாழ்வியல் திறன் பயிற்சிகள் வழங்கப்படும்.
* 1 முதல் 12-ம் வகுப்பு வரை, பார்வைத்திறன் குறைபாடுள்ள மாணவர்களின் பயன்பாட்டுக்காக மின்னுருப் புத்தகங்கள் உருவாக்கப்படும்.
சிறப்பு எழுத்தறிவு திட்டம்
* சிறைகளில் உள்ள முற்றிலும் எழுத, படிக்கத் தெரியாத ஆயிரத்து 249 சிறைவாசிகளுக்கு அடிப்படை எழுத்தறிவுக் கல்வி வழங்கிடும் வகையில் சிறப்பு எழுத்தறிவு திட்டம் செயல்படுத்தப்படும்.
* புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் கற்போர் மையங்களுக்கு மாநில எழுத்தறிவு விருது வழங்கப்படும்.
* நாட்டுடமை ஆக்கப்பட்ட நூல்கள் மற்றும் அரிய நூல்கள், அறிஞர் குழுவால் தேர்வு செய்யப்பட்டு, ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத்தால் தனி வெளியீடாகவோ, கூட்டு வெளியீடாகவோ கொண்டுவரப்படும்.
* உலகப் புகழ்பெற்ற இலக்கியங்கள் மற்றும் உலக இலக்கியங்களின் எளிமைப்படுத்தப்பட்ட, குழந்தைகளுக்கான நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு கொண்டுவரப்படும்.
* ஐந்து இலக்கியத் திருவிழாக்களுடன் இணைந்து இளைஞர் இலக்கியத் திருவிழா நடத்தப்படும்.
* கன்னிமாரா நூலகத்தில் நவீன வசதிகளுடன் சிறப்பு பிரிவுகள் தொடங்கப்படும்.
* அனைத்து மாவட்ட மைய நூலகங்கள், முழுநேர கிளை நூலகங்கள் படிப்படியாக புதுப்பிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.