இசையில் ஏது சாதிய ஏற்றத்தாழ்வு; டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது வழங்குவதை வரவேற்கிறோம் - முத்தரசன்
டி.எம்.கிருஷ்ணா மியூசிக் அகாடமியின் “சங்கீத கலாநிதி விருது” பெற்றதன் மூலம் அந்த விருதுக்கு பெருமை சேர்ந்துள்ளது என்று முத்தரசன் கூறியுள்ளார்.
சென்னை,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-
கர்நாடக சங்கீத வரலாற்றில் புதுப்பாதை வகுத்து செயல்படுவர் இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா. மனித சமுக மேன்மைக்கும், நல்லிணக்க சூழல் நிலைத்து நீடிக்கவும் கர்நாடக இசைத் துறையில் முற்போக்கு சிந்தனையை விதைத்து வரும் கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவை சென்னை மியூசிக் அகாடமி "சங்கீத கலாநிதி" விருதுக்கு தேர்வு செய்திருப்பது பொருத்தமானது வரவேற்று மகிழதக்கது.
ஆனால், சிலர் மதவாத கண்ணோட்டத்திலும், சாதிய ஏற்றத் தாழ்வுகளை கட்டி அழும் பிற்போக்கு கருத்து நிலையில் ரஞ்சனி காயத்திரி சகோதரிகள் இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா மீது காழ்ப்புணர்வை கருத்துக்களாக கொட்டி வருவதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கண்டிக்கிறது.
கர்நாடக சங்கீதத்தை சாதிய எல்லைக்குள் அடைத்து வைத்திருந்த ஆதிக்க சக்திகளிடம் இருந்து மீட்டு, அடித்தட்டு மக்களிடம் கொண்டு சேர்த்து, அவர்களும் இணைந்து கொண்டாடும் நிலைக்கு கொண்டு சென்ற இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா ஏற்கனவே "மகசேசே" உள்பட பல விருதுகள் பெற்றவர். அவர் மியூசிக் அகாடமியின் "சங்கீத கலாநிதி விருது" பெற்றதன் மூலம் அந்த விருதுக்கு பெருமை சேர்ந்துள்ளது. கர்நாடக இசைத் துறையில் டி.எம்.கிருஷ்ணா மேலும் பல புதுமை படைத்து சிகரம் நோக்கி உயர்ந்து, குன்றாப் புகழ் பெற வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.