காதலுக்கு எதிர்ப்பு... 2 வாரங்களில் திருமணம்... வீட்டை விட்டு வெளியேறி காதலனை கரம்பிடித்த கல்லூரி மாணவி

திருமணம் நின்றதால் கிருஷ்ணகிரியை சேர்ந்த மாப்பிள்ளை வீட்டார், பெண் வீட்டாரிடம் தகராறில் ஈடுபட்டனர்.

Update: 2024-05-26 11:27 GMT

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அக்ரஹார தெருவை சேர்ந்தவர் செல்வகுமார். சிப்ஸ் கடை நடத்தி வருகிறார். இவருடைய மகள் ஜோதி பிரியா (வயது 22). தர்மபுரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரும், மாட்லாம்பட்டியை சேர்ந்த துணி வியாபாரி செல்வகுமார் (24) என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

இவர்களுடைய காதலுக்கு ஜோதி பிரியா குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததோடு, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ஒருவருடன் ஜோதி பிரியாவிற்கு திருமணம் நடத்த நிச்சயம் செய்தனர். இந்த திருமணம் இன்னும் 2 வாரங்களில் நடைபெற இருந்தது. இருதரப்பு வீட்டாரும் திருமண ஏற்பாடுகளை விறுவிறுப்பாக செய்து வந்தனர்.

எனினும் ஜோதி பிரியா திருமணத்தில் விருப்பம் இல்லாமல் காதலனிடம் திருமணம் குறித்து கூறினார். இதனால் வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி கோவை மருதமலை முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். மகளை காணாததால் செல்வகுமார் இதுதொடர்பாக காரிமங்கலம் போலீசில் புகார் கொடுத்திருந்தார்.

இதனை அறிந்த காதல் தம்பதி நேற்று தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு காரிமங்கலம் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து போலீசார் இருதரப்பு பெற்றோர்களையும் அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து ஜோதி பிரியாவை காதல் கணவர் செல்வகுமாருடன் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.

இது ஒருபுறம் இருக்க நிச்சயிக்கப்பட்ட திருமணம் நின்றதால் கிருஷ்ணகிரியை சேர்ந்த மாப்பிள்ளை வீட்டார், பெண் வீட்டாரிடம் தகராறில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்