மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
லஞ்சம் வாங்கிய புகாரில் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்ட நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
மதுரை,
அரசு மருத்துவரிடம் 20 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரியை கைது செய்த விவகாரத்தில் மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருவதால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கண்காணிப்பாளராக உள்ள மருத்துவர் சுரேஷ்பாபு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2018ம் தேதி வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அமலாக்கத்துறை அதிகாரியாக கடந்த 2018ம் ஆண்டு மத்திய பிரதேசத்தில் அங்கித் திவாரி என்பவர் பணியில் சேர்ந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 2023ம் ஆண்டு மதுரைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். மருத்துவர் சுரேஷ் பாபு மீதான வழக்கு அமலாக்கத்துறை வசம் ஒப்படைக்கப்படுவதாக கூறியும், இதிலிருந்து அவரை காப்பாற்றுவதற்கு 3 கோடி ரூபாயை வழங்குமாறு அங்கித் திவாரி, மருத்துவர் சுரேஷ்பாபுவிடம் கேட்டுள்ளார்.
இதற்கு சுரேஷ்பாபு சம்மதிக்காததால், இறுதியாக 51 லட்சம் ரூபாய் தர வேண்டும் என பேரம் பேசி முடிக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் ஒன்றாம் தேதி 20 லட்சம் ரூபாயை முதல் கட்டமாக திண்டுக்கல்லில் இருந்து நத்தம் செல்லும் சாலையில் காரில் வைத்து சுரேஷ்பாபு, திவாரியிடம் கொடுத்துள்ளார். மீதி தொகையை நேற்று மருத்துவரிடம் வாட்ஸ்அப் கால் மூலம் கேட்டபோது, இது குறித்து திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் சுரேஷ் பாபு புகார் அளித்தார்.
அவர்கள் கொடுத்த ஆலோசனையின்படி திண்டுக்கல்லில் உள்ள மதுரை புறவழிச்சாலையில் அதிகாரியின் காரில் 20 லட்சம் ரூபாயை ரசாயனம் தடவிய நோட்டுகளாக சுரேஷ்பாபு வைத்துள்ளார். அந்த காரை அவர் எடுத்துச் செல்ல முயன்ற போது லஞ்ச ஒழிப்புத்துறையினர் அவரை விரட்டிச்சென்று கொடை ரோட்டில் உள்ள டோல்கேட்டில் வைத்து கையும் களவுமாக பிடித்தனர். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் மதுரை தபால் தந்தி நகர் பகுதியில் உள்ள அமலாக்கத்துறை உதவி மண்டல அலுவலகத்தில், திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணைக்காக வருகை தந்தனர். அமலாக்கத்துறை அலுவலகத்தில் உயர் அதிகாரி இல்லாத நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை செய்ய அனுமதிக்க முடியாது என அங்கிருந்தவர்கள் தெரிவித்ததால் நீண்ட நேரமாக அதிகாரிகள் காத்திருந்தனர். இதையடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது