சென்னையில் மற்றொரு பகீர் சம்பவம்: காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை வீடு புகுந்து கொல்ல பாய்ந்த கொடூரம் - 'சைக்கோ' வாலிபர் அதிரடி கைது

சென்னையில் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை வீடு புகுந்து கொல்ல பாய்ந்த இன்னொரு பகீர் சம்பவம் நிகழ்ந்தது. இது தொடர்பாக ‘சைக்கோ’ வாலிபர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2022-10-15 04:09 GMT

சென்னை பரங்கிமலை ரெயில் நிலையத்தில் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி சத்தியப்பிரியாவை ரெயில் முன் தள்ளி, துடிக்க, துடிக்க கொலை செய்த கொடூர சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது. இந்த மாபாவ சைக்கோ கொலையாளி சதீஷ் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த பரபரப்பான சம்பவம் அடங்கும் முன்பே, சென்னை சூளைமேட்டில் இன்னொரு கொடூர சம்பவம் காதல் பிரச்சினையில் அரங்கேறி உள்ளது.

சூளைமேடு பகுதியில் வசிக்கும் சித்ரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் வீட்டு வேலை செய்து பிழைப்பவர். இவரது மகள் கவிதா (வயது 18-பெயர் மாற்றப்பட்டுள்ளது) கல்லூரி மாணவி. அதே பகுதியைச்சேர்ந்த ரஷீத் (28) என்ற வாலிபர் மாணவி கவிதாவை காதலித்து வந்துள்ளார். ஆனால் அவரது காதலை கவிதா ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிகிறது.

இந்தநிலையில், நேற்று முன்தினம் சித்ராவும், கவிதாவும் வீட்டில் தனியாக இருந்தனர். அப்போது ரஷீத் வீட்டிற்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்டுள்ளார். கவிதாவை காதலிக்கிறேன். எனது காதலை கவிதா ஏற்க மறுத்து வருகிறார். பைத்தியம் போல, கவிதா பின்னால் சுற்றி வருகிறேன். கவிதா இல்லாமல் எனக்கு வாழ்க்கை இல்லை. எனவே எனக்கு கவிதாவை திருமணம் செய்து தரவேண்டும், என்று ரஷீத் கூச்சல் போட்டதாக தெரிகிறது.

இதற்கு சித்ராவும், கவிதாவும் மறுப்பு தெரிவித்தனர். உடனே வாலிபர் ரஷீத் அவர்கள் மீது பாய்ந்து தாக்க முற்பட்டதாக கூறப்படுகிறது. கவிதாவும், சித்ராவும் கூச்சல் போட்டனர். உடனே அங்கிருந்து வெளியேறிய ரஷீத், என்னைக்கு இருந்தாலும், நான்தான் கவிதா கழுத்தில் தாலி கட்டுவேன், இல்லாவிட்டால், கொலை விழும், என்று மிரட்டல் விடுத்து விட்டு சென்றதாக தெரிகிறது.

இதுபற்றி சித்ரா கொடுத்த புகார் அடிப்படையில் சூளைமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். சைக்கோ போல மிரட்டிவிட்டு சென்ற வாலிபர் ரஷீத் பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்