ஆனி அமாவாசையையொட்டி பவானி கூடுதுறையில் புனித நீராடிய பக்தர்கள்
பவானி கூடுதுறையில் புனித நீராடிய பக்தர்கள்
ஆனி அமாவாசையையொட்டி பவானி கூடுதுறையில் பக்தர்கள் புனித நீராடியதுடன், முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.
சங்கமேஸ்வரர் கோவில்
ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில் பிரசித்தி பெற்ற சங்கமேஸ்வரர் கோவில் உள்ளது. பவானி கூடுதுறையில் பவானி ஆறு மற்றும் காவிரி ஆறுடன் கண்ணுக்கு புலப்படாத தேவர்களின் அமுத நதியும் கூடுவதாக ஐதீகம்.
இதனால் இங்கு புனித நீராடி முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து சங்கமேஸ்வரரை தரிசனம் செய்தால் குடும்பத்தில் நல்லது நடக்கும் என்பது ஐதீகம்.
குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் பவானி கூடுதுறையில் தை அமாவாசை, புரட்டாசி அமாவாசை, ஆடி அமாவாசை போன்ற நாட்களில் பவானி கூடுதுறையில் புனித நீராடி தங்களுடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் திதி கொடுப்பதற்காக அதிக பக்தர்கள் குவிவார்கள்.
திதி- தர்ப்பணம்
இந்த நிலையில் ஆனி அமாவாசையையொட்டி பவானி கூடுதுறையில் நேற்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். பின்னர் அவர்கள் ஆற்றில் புனித நீராடி தங்களுடைய முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தனர். சில பக்தர்கள் செவ்வாய் தோஷம் மற்றும் நாக தோஷம் விலக வேண்டியும் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
பின்னர் சங்கமேஸ்வரர் கோவிலுக்கு பக்தர்கள் சென்று நீண்ட வரிசையில் நின்று சாமியை வழிபட்டனர்.