அண்ணன் பெருமாள் கோவில் ஆண்டு திருவிழா
சீர்காழி அருகே அண்ணன் பெருமாள் கோவிலின் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவெண்காடு:
சீர்காழி அருகே அண்ணன் பெருமாள் கோவிலின் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அண்ணன் பெருமாள் கோவில்
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே அண்ணன் கோவில் கிராமத்தில் அண்ணன் பெருமாள் கோவில் உள்ளது. இந்த பெருமாள் திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாளுக்கு அண்ணனாக கருதப்படுகிறார். திருப்பதி பெருமாளுக்கு வேண்டி நேர்த்திக்கடன் செலுத்த வேண்டிய பக்தர்கள் இந்த கோவிலில் அதனை செலுத்தலாம் எனவும், திருமங்கை ஆழ்வார் மனைவி குமுதவல்லி நாச்சியார் இந்த கோவிலில் உள்ள திருக்குளத்தில் அல்லி மலரில் அவதரித்ததாக புராண வரலாறுகள் கூறுகின்றன.
குலசேகர ஆழ்வார், பெரியாழ்வார் உள்ளிட்ட பல்வேறு ஆழ்வார்கள் இந்த பெருமாளை பற்றி பாசுரங்கள் பாடியுள்ளனர். திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாளுக்கு ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் பிரம்மோற்சவம் நடைபெறும் நாளில் இந்த கோவிலில் கொடி ஏற்றத்துடன் ஆண்டு திருவிழா தொடங்குவது வழக்கம்.
கொடியேற்றம்
அதன்படி நேற்று முன்தினம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி கொடி மரத்திற்கு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டு அண்ணன் பெருமாள் முன்னிலையில் கொடி ஏற்றப்பட்டது. அப்பொழுது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி அன்பரசன், ஸ்தலத்தார்கள், கிராம பொதுமக்கள் மற்றும் உபயதாரர்கள் செய்திருந்தனர். இதன் முக்கிய திருவிழாவான கருட சேவை வருகிற 21-ந் தேதியும், 24-ந் தேதி இரவு திருக்கல்யாணம், 26-ந் தேதி தேர் வடம் பிடித்தலும் மற்றும் 28-ந் தேதி தெப்ப திருவிழாவும் நடக்கிறது.