மன்னிப்பு கேட்க முடியாதா..? அடுத்த நடவடிக்கை இதுதான்: அண்ணாமலை அதிரடி பதில்

மன்னிப்பு கேட்க நாங்கள் சாவர்க்கர் பரம்பரை அல்ல, பெரியாரின் பேரன்கள் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியிருந்தார்.

Update: 2023-11-25 09:33 GMT

சென்னை:

ஆவின் நிறுவனத்தின் பச்சை நிற பாக்கெட் பால் 4.5 சதவீத கொழுப்புச் சத்து கொண்டது. இந்த பால் பாக்கெட் விநியோகத்தை நவம்பர் 25-ம் தேதியுடன் நிறுத்தவும், அதற்கு பதில் அதே விலையில் 3.5 கொழுப்புச் சத்துடைய டிலைட் ஊதா நிற பால் பாக்கெட்டுகளை விற்பனை செய்யவும் அரசு முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு, எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன. தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலையும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

பாலில் கொழுப்புச்சத்தைக் குறைத்துவிட்டு, விலையைக் குறைக்காமல் தொடர்ந்து பொதுமக்களை மோசடி செய்துவருவதை தி.மு.க அரசு உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும், பொதுமக்கள் கொடுக்கும் விலைக்கு, தரமான ஆவின் பாலை வழங்க வேண்டும் எனவும் அண்ணாமலை வலியுறுத்தினார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், வடமாநில பால் உற்பத்தி நிறுவனங்களிடம் சிலர் கையூட்டு பெற்று ஆவின் நிறுவனத்திற்கு எதிராக செயல்படுவதாக குற்றம்சாட்டினார்.

இதற்கு பதில் அளித்த அண்ணாமலை, அமைச்சர் மனோ தங்கராஜ் கூறும் குற்றச்சாட்டை 48 மணி நேரத்தில் நிரூபிக்க வேண்டும், இல்லாவிட்டால் தவறான தகவலை பகிர்ந்தமைக்கு மன்னிப்பு கோரி, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என கூறியிருந்தார்.

இதற்கு இன்று பதில் அளித்துள்ள மனோ தங்கராஜ், மன்னிப்பு கேட்க நாங்கள் சாவர்க்கர் பரம்பரை அல்ல, பெரியாரின் பேரன்கள் என்று கூறியதுடன், கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தினார்.

இந்த வார்த்தைப் போரின் உச்ச கட்டமாக அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் மீண்டும் பதிவிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

கூறிய அவதூறுக்கு ஆதாரம் இருக்கிறதா என்று கேட்டால், வழக்கம்போல, நான் அவர் பேரன், இவர் தம்பி என்ற கம்பி கட்டும் கதை எல்லாம் கூறிக்கொண்டிருக்கிறார் அமைச்சர் மனோ தங்கராஜ். நீதிமன்றத்தில் இந்தக் கதை எல்லாம் செல்லாது என்பதை, பல நீதிமன்றங்களில் மன்னிப்பு கேட்ட வரலாறு உள்ள அவரது உடன்பிறப்பிடமோ, அண்ணனிடமோ கேட்டுத் தெரிந்து கொண்டிருந்திருக்கலாம்.

ஏற்கனவே, பிரதமர் மோடியை மிகவும் தரம் தாழ்ந்த முறையில் விமர்சித்து விட்டு, பின்னர் பொதுமக்கள் எதிர்ப்புக்குப் பயந்து பதிவை நீக்கியதுபோல, அவதூறு வழக்குக்குப் பயந்து பதிவை நீக்கிய கோழை நீங்கள், வீரம் பேசுவது நகைச்சுவை.

ஆதாரமற்ற குற்றச்சாட்டை பரப்பிய உங்கள் மீது 1 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடரவுள்ளேன். அந்த ஒரு கோடி ரூபாய் பணம், ஆவின் நிறுவனத்திற்குப் பால் கொடுக்கும் நமது தமிழக விவசாயிகளின் மேம்பாட்டு நிதியாக ஆவின் நிறுவனத்திற்கு வழங்கப்படும். உங்களை போன்ற ஒரு அமைச்சர் தமிழகத்தின் சாபக்கேடு.

இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

ஒருபுறம் இந்த வார்த்தை போர் நீண்டுகொண்டே செல்லும் நிலையில், எக்ஸ் தளத்தில் அண்ணாமலை மற்றும் அமைச்சர் மனோ தங்கராஜ்-க்கு எதிரான ஹேஷ்டேக்குகள் வைரலாகி வருகின்றன. இரு தரப்பினரும் சரமாரியான விமர்சனங்களை முன்வைத்தவண்ணம் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்