"தமிழக மக்களுக்கு ஒத்தையாக கொடுத்து கத்தையாக எடுப்பதே தி.மு.க.வின் திட்டம்" அண்ணாமலை குற்றச்சாட்டு

“தமிழக மக்களுக்குஒத்தையாக கொடுத்து கத்தையாக எடுப்பதே தி.மு.க.வின் திட்டம் ஆகும்” என்று பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறினார்.

Update: 2023-09-14 23:48 GMT

திண்டுக்கல்,

தமிழகம் முழுவதும் 'என் மண், என் மக்கள்' என்ற பெயரில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல், சின்னாளப்பட்டி, நிலக்கோட்டையில் நடைபயணத்தை முடித்த அவர் 3-வது நாளாக நேற்று மாலை நத்தத்தில் நடைபயணத்தை தொடங்கினார்.

நத்தம் அருகே உள்ள பள்ளப்பட்டி விலக்கு பகுதியில் இருந்து நடைபயணத்தை தொடங்கிய அண்ணாமலை புளிக்கடை பஸ்நிறுத்தம், கோவில்பட்டி வழியாக நத்தம் பஸ்நிலைய ரவுண்டானா பகுதிக்கு வந்தார்.

அங்கு திரண்டிருந்த பா.ஜ.க. தொண்டர்கள், பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது கூட்டத்தில் இருந்த பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் நின்று கொண்டிருந்தார். இதனைக்கண்ட அவர், கைக்குழந்தையை அண்ணாமலை வாங்கி சிறிது தூரம் நடந்தார். பின்பு அந்த பெண்ணிடமே குழந்தையை கொடுத்தார்.

30 சதவீத பெண்கள்

இதைத்தொடர்ந்து நத்தம் பஸ்நிலையம் அருகே ரவுண்டானா பகுதியில் வேனில் நின்றபடி அண்ணாமலை பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. தமிழக மக்களிடம் ஒத்தையாக கொடுத்து, கத்தையாக எடுப்பதே தி.மு.க.வின் திட்டம். தமிழகத்தில் டாஸ்மாக் கடை தேவை இல்லை என்று என்னிடம் 30 சதவீத பெண்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

பொய்யை மட்டும் சொல்லி ஆட்சி நடத்துவதே தி.மு.க.வின் வேலை. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 400 இடங்களையும், தமிழகத்தில் 39, புதுச்சேரியில் 1 இடத்தையும் கைப்பற்றி 3-வது முறையாக பிரதமராக மோடி பதவி ஏற்பார்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்