அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டணம் உயர்வு; எதிர்வரும் செமஸ்டருக்கு பொருந்தாது - அமைச்சர் பொன்முடி விளக்கம்

எதிர்வரும் செமஸ்டருக்கு மாணவர்கள் வழக்கமான தேர்வு கட்டணத்தை செலுத்தலாம் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

Update: 2023-11-17 08:51 GMT

விழுப்புரம்,

அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டணம் 50% அதிரடியாக உயர்ந்துள்ளது. இளநிலை பொறியியல் படிப்பு தேர்வு கட்டணமாக ஒரு தாளுக்கு ரூ.150 பெறப்பட்டு வந்த நிலையில், தேர்வுக்கட்டணம் 50% உயர்த்தப்பட்டு ரூ.225 ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இளநிலை செய்முறை சமர்ப்பிப்பு ரூ.450 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இறுதியாண்டு மாணவர்கள் பிராஜெக்ட் செய்ய ரூ.600 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் அந்த கட்டணம் ரூ.900 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு செமஸ்டருக்கு 9 தாள்கள் தேர்வு எழுத வேண்டி உள்ளதால் ரூ.2,050 கட்ட வேண்டிய சூழல் நிலவியுள்ளதாக மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் 50% தேர்வுக்கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டண உயர்வு எதிர்வரும் செமஸ்டருக்கு பொருந்தாது என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக விழுப்புரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது;-

"பல்கலைக்கழகங்களில் அனைத்து பாடங்களுக்கும் ஒரே மாதிரியாக தேர்வு கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என முதலிலேயே முடிவெடுத்தோம். அந்த அடிப்படையில் தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

விரைவில் அனைத்து துணைவேந்தர்களையும் அழைத்துப் பேசி அடுத்த ஆண்டு முதல் ஒரே விதமான கட்டணத்தை வசூலிக்க ஏற்பாடுகள் செய்யப்படும். தற்போது எதிர்வரும் செமஸ்டருக்கு இந்த கட்டண உயர்வு பொருந்தாது. எனவே மாணவர்கள் இந்த செமஸ்டருக்கு வழக்கமாக செலுத்தி வந்த தேர்வு கட்டணத்தை செலுத்தினால் போதுமானது."

இவ்வாறு அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.


Full View

 

Tags:    

மேலும் செய்திகள்