அங்கித் திவாரி ஜாமீன் வழக்கு - நீதிபதி விலகல்

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் வழக்கை விசாரிக்க நான் விரும்பவில்லை என்று நீதிபதி கோபமாக தெரிவித்தார்.

Update: 2024-03-12 10:51 GMT

மதுரை,

திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் துணை சூப்பிரண்டு டாக்டர் சுரேஷ்பாபு. இவர் மீது கடந்த 2018-ம் ஆண்டு திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசார் சொத்து குவிப்பு வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு அமலாக்கத்துறையிடம் வந்ததாகவும், வழக்கில் இருந்து அவரை விடுவிக்க மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி ரூ.51 லட்சம் லஞ்சம் கேட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் டாக்டர் சுரேஷ்பாபுவிடம் முதலில் ரூ.20 லட்சத்தை வாங்கிய அங்கித் திவாரி, 2-வது தடவையாக ரூ.20 லட்சத்தை வாங்கிய போது திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவர், மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் அலுவலகம், வீட்டில் சிக்கிய ஆவணங்கள் தொடர்பாக போலீஸ் காவலிலும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இதற்கிடையே திண்டுக்கல் தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் இருமுறையும், மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஒருமுறையும் அவர் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். அந்த 3 ஜாமீன் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனால் கடந்த 80 நாட்களுக்கு மேலாக அவர் மதுரை மத்திய சிறையில் இருக்கிறார்.

இந்த நிலையில், ஜாமீன் கோரி அமலாக்கத்துறை அதிகாரி அங்கித்திவாரி மீண்டும் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி விவேக்குமார் சிங் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி, அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்றும் ஜாமீன் வழங்கினால் வழக்கு தீர்த்து போய்ந்துவிடும் என்று வாதிட்டார். அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி, அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் ஜாமீனுக்கான நிபந்தனைகள் குறித்தும் வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி கோபமடைந்து அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் வழக்கை விசாரிக்க நான் விரும்பவில்லை. விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதி விவேக்குமார் அறிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்