வரசித்தி ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை
ஓசூரில் உலக நன்மைக்காக வரசித்தி ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் சாமி மீது கடலைக்காய் வீசி, பக்தர்கள் வழிபட்டனர்.
ஓசூர்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ராஜகணபதி நகரில் உள்ள வரசித்தி ஆஞ்சநேயர் கோவிலில் ஆண்டுதோறும் ஆங்கில புத்தாண்டு முதல் நாளன்று கடலைக்காய் திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நேற்று கடலைக்காய் திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி சிறப்பு ஹோமங்கள், சாமிக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. பின்னர், சாமி முன்பு குவித்து வைக்கப்பட்டு இருந்த கடலைக்காய் குவியலுக்கு பூஜைகள் நடத்தி மகாதீபாராதனை செய்யப்பட்டது. தொடர்ந்து அங்கு திரண்டிருந்த பக்தர்கள் கடலைக்காயை ஆஞ்சநேயர் மீது வீசி உலக நன்மைக்காகவும், விவசாயம் செழிக்கவும் வேண்டி வழிபட்டனர். விழாவையொட்டி சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.