ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு பூஜை

அனுமன் ஜெயந்தியையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2022-12-23 18:45 GMT

அனுமன் ஜெயந்தியையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அனுமன் ஜெயந்தி விழா

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி நேற்று ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு பூஜைகள், வழிபாடு நடந்தது. கிருஷ்ணகிரியில் பிரசித்தி பெற்ற காட்டுவீர ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று காலை 5 மணிக்கு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் சுதர்ஷன ஹோமம் நடந்தது. தொடர்ந்து வெள்ளிக்கவச அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை தங்கத்தேர் பிரகார உற்சவம் நடந்தது. இதையொட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

வீர ஆஞ்சநேயர்

கிருஷ்ணகிரி பழையபேட்டை சீதாராம வீர ஆஞ்சநேயர் சமேத ராகவேந்திர சாமி கோவிலில், அனுமன் ஜெயந்தியையொட்டி சிறப்பு அபிஷேகம், வேத பாராயணம், சுதர்ஷன ஹோமம் நடந்தது. தொடர்ந்து மங்களாரத்தி, தீர்த்தப்பிரசாதம் வழங்கப்பட்டது. ஆஞ்சநேயர் வெள்ளிக்கவச அலங்காரத்தில் அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.

கிருஷ்ணகிரி வீர ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தியையொட்டி நேற்று கலச அபிஷேகம் நடந்தது. பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பஞ்சமுக ஆஞ்சநேயர்

கிருஷ்ணகிரி பழையபேட்டை லட்சுமி நாராயண சாமி கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து உற்சவர், நகர் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ராசுவீதி ராஜாராமர் மற்றும் அபய ஆஞ்சநேயர் கோவில், புறநகர் பஸ் டிப்போ அருகில் உள்ள வாயு வாகன பக்த ஆஞ்சநேயர், போகனப்பள்ளி பக்த ஆஞ்சநேயர் கோவில் ஆகிய கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.

இதேபோன்று கே.ஆர்.பி., அணை குன்று ஆஞ்சநேயர் கோவில், எலுமிச்சங்கிரி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில், காவேரிப்பட்டணம் தென்பெண்ணை ஆற்றங்கரையில் உள்ள ராமபக்த வீர ஆஞ்சநேயர் கோவில் ஆகிய கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஓசூர்

அனுமன் ஜெயந்தியையொட்டி ஓசூர் மத்தம் அக்ரஹாரம் பகுதியில் உள்ள கருணாஞ்சநேயர் கோவிலில் அதிகாலை முதல் சிறப்பு ஹோமங்கள், அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன மேலும் சாமிக்கு வெண்ணை காப்பு அலங்காரம் செய்தும், 1,008 வடை மாலை சாற்றியும் பூஜைகள் செய்து மகாதீபாராதனை செய்யப்பட்டன. சிறப்பு அலங்காரங்களில், சாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இதேபோல் ஓசூர் தர்கா அருகே மாருதி நகரில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி சிறப்பு பூஜைகளுக்கு பின், சாமி சிறப்பு சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மேலும் விழாவையொட்டி, ஓசூர் நாராயண தாதய்யா ஆசிரம நிறுவனர் வெங்கடேஸ்வர சுவாமிஜியின் பக்தி சொற்பொழிவு நடைபெற்றது.

பக்த ஆஞ்சநேயர்

ஓசூர் டி.வி.எஸ். நகர் அருகே அம்பாள் நகரில் உள்ள பக்த ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தியையொட்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் சாமிக்கு வடைமாலை, வெற்றிலை மாலை, துளசி மாலை சாற்றி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து சாமிக்கு சந்தனகாப்பு, வெண்ணை காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவையொட்டி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதேபோல், ஓசூரில் உள்ள பண்ட ஆஞ்சநேய சாமி கோவில், பாகலூர் ரோடு சர்க்கிளில் உள்ள அனுமார் கோவில் உள்ளிட்ட ஆஞ்சநேயர் மற்றும் ராமர் கோவில்களில் அனுமன் ஜெயந்தியையொட்டி சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

ஓசூர் அம்பாள் நகரில் லட்சுமி நரசிம்மர் கோவில், கொத்தூரில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோவில், கருடாழ்வார் ஆகிய கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தன. இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.

மல்லப்பாடி

பர்கூர் அருகே உள்ள மல்லப்பாடி சிங்கார கிராமத்தில் உள்ள சஞ்ஜீவி ராய சாமி ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்றது. இதையொட்டி சாமிக்கு அபிஷேக ஆராதனைகள், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதான பிரசாதம் வழங்கப்பட்டது.

இதேபோன்று மாவட்டத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களிலும் நேற்று சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம், பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்