சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார் அன்னியூர் சிவா
அன்னியூர் சிவாவுக்கு சபாநாயகர் அப்பாவு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
சென்னை,
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவில் தி.மு.க.வை சேர்ந்த அன்னியூர் சிவா மொத்தம் 1 லட்சத்து 24 ஆயிரத்து 53 வாக்குகளை பெற்று அமோக வெற்றி பெற்றார். பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி 56,296 வாக்குகள் பெற்றார். இதன் மூலம் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா, தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணியை விட 67,757 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
இதையடுத்து மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் பழனி, தேர்தல் பொதுப்பார்வையாளர் அமித்சிங் பன்சால் ஆகியோர் முன்னிலையில் விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர், வெற்றிச்சான்றிதழை அன்னியூர் சிவாவுக்கு, வழங்கினார். அப்போது அமைச்சர் பொன்முடி, ஜெகத்ரட்சகன் எம்.பி. மற்றும் தி மு க நிர்வாகிகள் உடன் இருந்தனர். இதையடுத்து, தி.மு.க. தலைவரும் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து அன்னியூர் சிவா வாழ்த்து பெற்றார்.
இந்நிலையில், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக அன்னியூர் சிவா இன்று பொறுப்பேற்றுள்ளார். தலைமை செயலகத்தில் அன்னியூர் சிவாவுக்கு சபாநாயகர் அப்பாவு பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, திருமாவளவன் எம்.பி. உள்ளிட்டோர் பங்கேற்றனர்.