வேலை நேரத்தை மாற்ற விவசாயிகள் எதிர்ப்பு
வேலை நேரத்தை மாற்ற விவசாயிகள் எதிர்ப்பு
உடுமலை,
தமிழ்நாட்டில் கால்நடை மருத்துவமனைகளின் வேலை நேரத்தை மாற்றக்கூடாது என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
கால்நடை மருத்துவமனைகள்
தமிழ்நாட்டில் கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் கால்நடை மருத்துவ நிலையங்கள், மருந்தகங்கள், செயல்பட்டு வருகின்றன. இவற்றின் வேலை நேரத்தை வேலை நாட்களில் காலை 8 மணிமுதல் மதியம் 2 மணி வரையும், ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையும் செயல்படும் வகையில் வேலை நேரத்தை மாற்றி அமைப்பதற்கான ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
அதன்படி உடுமலை கால்நடைபராமரிப்புத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விவசாய சங்க பிரதிநிதிகளுடனான கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கலந்து கொண்ட சங்க மாவட்ட தலைவர் மதுசூதனன், துணைச்செயலாளர் பரமசிவம் ஆகியோர் கொடுத்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-
பயன் இல்லை
விவசாயத்தொழிலாளர்களும், விவசாய வேலைகளுக்கு காலை 7 மணிக்கு சென்று விட்டு மதியம் 2 மணிக்கு வீடு திரும்புவார்கள். அதன் பின்புதான் தாங்கள் வளர்க்கும் கால்நடைகளை பராமரிக்கும் பணிகளைச்செய்வார்கள்.
இந்த நிலையில் வேலை நேரம் என்று மாற்றுவது என்பது எந்தவித பயனும் இல்லாததாக மாறிவிடும். மாலை 3 மணிமுதல் 5 மணிவரை யாராவது ஓரிருவர் சென்றாலும் மற்றவர்கள் மருத்துவமனையில் இருப்பது முதலுதவி போன்ற உதவிகளை செய்ய பயன்படும். மதியம் 2 மணியுடன் வேலை நேரம் முடிவடைவதால் மறுநாள் காலை 8 மணிவரை, இடைவெளியில் எந்தவித கால்நடை மருத்துவதேவையும் கிடைக்காது.
வேலை நேரத்தை மாற்றக்கூடாது
ஆகவே தற்போது கால்நடை மருத்துவ நிலையங்களில் வேலை நேரத்தை மாற்றக்கூடாது. மேலும் அவசரத்தேவைகளுக்காக போன் எண் 1968 அழைத்தால் வரும் நடமாடும் மருத்துவ வாகனங்கள்,
போதுமான அளவில் இல்லை. அதை அதிகப்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
----