கால்நடைகளை வேட்டையாடும் மர்ம விலங்கு எது?

Update: 2023-05-06 15:55 GMT


மடத்துக்குளம் பகுதியில் கால்நடைகளை வேட்டையாடும் மர்ம விலங்கு எது என்பது குறித்து வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

போராட்டம்

விவசாயிகளின் மிக முக்கிய வாழ்வாதாரமாக கால்நடை வளர்ப்பு உள்ளது. இந்த நிலையில் சமீப காலங்களாக மடத்துக்குளத்தையடுத்த மைவாடி, கருப்புசாமிபுதூர், படையாச்சிபுதூர், சின்னப்பன்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் பல ஆடுகளை மர்ம விலங்குகள் கடித்துக் கொன்றுள்ளன. மேலும் கன்றுகளையும் அவை கடித்துக் கொன்றுள்ளதாக கூறப்படுகிறது. எனவே மர்ம விலங்கை அடையாளம் காணவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவும் மாவட்ட கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுபோல உடுமலை பகுதியிலும் பல இடங்களில் ஆடுகள் கடித்துக் குதறப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டுள்ளன. உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி கடந்த காலங்களில் தாலுகா அலுவலகம் முன் இறந்த ஆடுகளைப் போட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவமும் நடைபெற்றுள்ளது. நேற்று முன்தினம் தாந்தோணி பகுதியில் கொல்லப்பட்ட ஆடுகளுடன் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனாலும் ஆடுகளைக் கொல்வது வன விலங்குகள் இல்லை என்பதே வனத்துறையினரின் கருத்தாக உள்ளது. வேட்டை நாய்களே ஆடுகளை கடித்துக் கொல்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்காணிப்பு கேமரா

இந்த நிலையில் மைவாடி பகுதிக்கு அருகிலுள்ள புலிக்குண்டு பகுதியில் 2 வேட்டை நாய்கள் பதுங்கியிருப்பதாக தகவல் பரவியது. இதனால் விவசாயிகள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதற்குள் அந்த நாய்கள் அந்த இடத்திலிருந்து ஓடி விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நிலங்களில் உள்ள மர்ம விலங்கின் காலடித் தடங்களை அமராவதி வனச்சரக அலுவலர் சுரேஷ் தலைமையில் வனவர் காளிமுத்து மற்றும் வேட்டைத் தடுப்பு காவலர்கள் நேற்று ஆய்வு செய்தனர்.

மேலும் மர்ம விலங்குகளின் நடமாட்டம் குறித்து முக்கிய இடங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் அமைத்து கண்காணிக்கத் திட்டமிட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். நீண்ட நாட்களாக யாருடைய கண்களிலும் சிக்காமல் போக்கு காட்டி வரும் மர்ம விலங்கு எது என்ற கேள்விக்கு இனியாவது விடை கிடைக்குமா? கால்நடைகளை வேட்டையாடுவது தடுக்கப்படுமா? என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும் செய்திகள்