ஊஞ்சலூர் அருகே மர்ம விலங்கு கடித்து 8 ஆடுகள்- 3 கோழிகள் பலி- விவசாயிகள் அச்சம்

ஊஞ்சலூர் அருகே மர்மவிலங்கு கடித்து 8 ஆடுகள், 3 கோழிகள் பலியாகின. இதனால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளார்கள்.

Update: 2022-08-11 21:39 GMT

ஊஞ்சலூர்

ஊஞ்சலூர் அருகே மர்மவிலங்கு கடித்து 8 ஆடுகள், 3 கோழிகள் பலியாகின. இதனால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளார்கள்.

செத்துக்கிடந்தன...

ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் அருகே உள்ள கல்வெட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 56). இவர் தன்னுடைய தோட்டத்தில் பட்டி அமைத்து 11 ஆடுகள், கோழிகள், கறவை மாடுகள் வளர்த்து வருகிறார்.

நேற்று முன்தினம் மாலை வழக்கம் போல் மாடுகள், கோழிகள், ஆடுகளுக்கு தீவனம் வைத்து பட்டியை பூட்டி விட்டு சென்று விட்டார்.

நேற்று காலை வழக்கம்போல் பட்டிக்கு வந்து பார்த்தார். அப்போது 8 ஆடுகள், 3 கோழிகள் கடித்து குதறப்பட்டு, ரத்தம் வழிய செத்துக்கிடந்தன.

துரத்தி...துரத்தி கொன்றது

ஏதோ மர்ம விலங்கு நேற்று முன்தினம் இரவு பட்டிக்குள் புகுந்து ஆடுகளையும், கோழிகளையும் வேட்டையாடி இருப்பது தெரிய வந்தது. மேலும் ஆடுகளும், கோழிகளும் ஆங்காங்கே சற்று தூரத்தில் செத்துக்கிடந்தன. அதனால் மர்ம விலங்கு ஆடுகளையும், கோழிகளையும் துரத்தி, துரத்தி கடித்து கொன்று இருக்கலாம் என்பது தெரிய வந்தது.

இதுகுறித்து கந்தசாமி கிராம நிர்வாக அலுவலர், கால்நடை துறை மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

மர்ம விலங்கு எது?

ஆடு, கோழிகளை வேட்டையாடியது வெறிநாயா? அல்லது செந்நாய் கூட்டமா? வேறு ஏதேனும் மர்ம விலங்கா? என்பது தெரியவில்லை. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து ஆடு, கோழிகளை கொன்ற விலங்கு எது என்று கண்டறிய வேண்டும். மேலும் கண்காணிப்பு கேமரா அமைத்து மர்ம விலங்குகளை பிடிக்க வேண்டும் என்று அந்த பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். தொடர்ந்து அந்த பகுதியில் மர்ம விலங்கின் வேட்டை தொடருமோ? என்று கால்நடை வளர்க்கும் விவசாயிகள் அச்சத்தில் உள்ளார்கள்.

சம்பவம் நடந்த கல்வெட்டுபாளையம் உள்ள வெங்கம்பூர் பேரூராட்சியில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்புதான் 86 தெரு நாய்களை பிடித்து சென்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது 

Tags:    

மேலும் செய்திகள்