சதுரகிரி கோவிலில் ஆனி மாத சனி பிரதோஷ வழிபாடு

சமேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி கோவிலில் ஆனி மாத சனி பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-07-15 18:42 GMT

வத்திராயிருப்பு

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி கோவிலில் ஆனி மாத சனி பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சனி பிரதோஷம்

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது.இந்த கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் பிரதோஷம் மற்றும் அமாவாசை, பவுர்ணமி நாட்கள் மட்டுமே பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய வனத்துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. நேற்று ஆனி மாத சனி பிரதோஷத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்த ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதல் தாணிப்பாறை வனத்துறை கேட்டின் முன்பு குவிந்தனர்.

காலை 6.30 மணிக்கு கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலைப்பாதை வழியாக சாமி தரிசனம் செய்வதற்காக நடந்து சென்றனர். சுந்தரமகாலிங்க சுவாமிக்கு மாலை 4.30 மணி அளவில் நடைபெற்ற பிரதோஷ சிறப்பு பூஜையில் 18 வகையான சிறப்பு அபிஷேகம் மற்றும் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

சிறப்பு வழிபாடு

இந்த சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கோவில் அமைந்து இருப்பதால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து முடித்தவுடன் உடனடியாக தாணிப்பாறை அடிவாரப் பகுதிக்கு வர வேண்டுமென வனத்துறையினர் பக்தர்களுக்கு அறிவுறுத்தினர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.

ராஜபாளையம்

ராஜபாளையம் பகுதிகளில் அமைந்துள்ள சிவன்கோவிலில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு சொக்கர் என்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், மாயூரநாதர் சுவாமி கோவில், கருப்ப ஞானியார் கோவில், அருணாச்சலேஸ்வரர் கோவில், குருசாமி கோவில், பறவை அன்னம் காத்தருளிய சாமி கோவில், மதுரை சாலையில் உள்ள தாரண்யா நந்தீஸ்வரர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

முன்னதாக நந்தீஸ்வரருக்கு மஞ்சள், தேன், இளநீர், பால், தயிர், எலுமிச்சை, கரும்புச் சாறு, பன்னீர், சந்தனம் போன்ற பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடந்தது. அதேபோல ராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்தூர் தவநந்தி கண்டீஸ்வரர் கோவில், தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவில், வாழவந்தாள்புரம் கிராமத்தில் மன்மத ராஜலிங்கேஸ்வரர் கோவில், தெற்கு வெங்கநல்லூர் சிதம்பரேஸ்வரர் கோவில், சோழபுரம் விக்கிரம பாண்டீஸ்வரர் கோவில், அயன்கொல்லம் கொண்டான் வீரபாண்டீஸ்வரர் கோவில், இளந்திரை கொண்டான் காலா ஹஸ்தீஸ்வரர் கோவில் உள்பட பல்வேறு சிவன் கோவில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்