தேர்வு அறையில் தூங்கியதை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்; ஆசிரியரின் மூக்கை உடைத்த பிளஸ்-2 மாணவர்
சென்னை திருவொற்றியூர் தேர்வு அறையில் தூங்கியதை தட்டிக்கேட்டதால் ஆத்திரத்தில் பிளஸ்-2 மாணவன் ஆசிரியரின் மூக்கை உடைத்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை திருவொற்றியூர் விம்கோ நகர் சக்திபுரத்தில் வசித்து வருபவர் சேகர் (வயது 46). இவர் அதே பகுதியில் உள்ள ஜெய்கோபால் கரோடியா அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 வகுப்பு ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் மாணவன். ஒருவன் கடந்த 10 நாட்களாக பள்ளிக்கு சரிவர வரவில்லை என தெரிகிறது. இது தொடர்பாக நேற்று மாணவனை அவரது தந்தை அழைத்து வந்து வருத்தம் தெரிவித்து கடிதம் வழங்கிய நிலையில் ஆசிரியர் சேகர் மாணவனை வணிகவியல் தேர்வு எழுத அனுமதித்துள்ளார்.
இந்த நிலையில், தேர்வு அறையில் மாணவன் தேர்வு எழுதாமல் தூங்கிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதை கண்ட ஆசிரியர் சேகர் மாணவனை தட்டி எழுப்பி தேர்வு எழுதுமாறு அறிவுரை கூறியுள்ளார். மேலும் மாணவன் தேர்வு எழுதாமல் தடை செய்யப்பட்ட புகையிலையை வாயில் வைத்து மென்று கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.இது குறித்து கேட்ட போது ஆத்திரமடைந்த மாணவன் ஆசிரியரை கையால் பயங்கரமாக தாக்கியதாக தெரிகிறது. இதில் ஆசிரியர் சேகருக்கு மூக்கு உடைந்து பலத்த காயம் ஏற்பட்டதில் ரத்தம் கொட்டியது. இதையடுத்து சக ஆசிரியர்கள் அவரை மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.
இது தொடர்பாக ஆசிரியர் திருவொற்றியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து, போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.