அங்காள பரமேஸ்வரி கோவில் மயானக் கொள்ளை திருவிழா

முடிதிருச்சம்பள்ளி அங்காள பரமேஸ்வரி கோவிலில் நடந்த மயானக்கொள்ளை திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2023-02-20 18:45 GMT

பொறையாறு:

முடிதிருச்சம்பள்ளி அங்காள பரமேஸ்வரி கோவிலில் நடந்த மயானக்கொள்ளை திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மயானக் கொள்ளை திருவிழா

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே முடிதிருச்சம்பள்ளியில் அங்காள பரமேஸ்வரி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி தினத்தின் மறுநாள் மாலை மயான கொள்ளை திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி அங்காள பரமேஸ்வரி கோவிலில் நேற்று முன்தினம் மாலை மயானக்கொள்ளை திருவிழா நடந்தது. இதனை முன்னிட்டு கோவிலில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு மாவிளக்கு போட்டு வழிபாடு நடத்தினர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும், சந்தனகாப்பு அலங்காரமும் நடைபெற்றது. பின்னர் அங்காளம்மன் ஊர்வலமாக புறப்பட்டு மயானத்தை (சுடுகாட்டை) அடைந்தது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய கிழங்குகள், நவதானியங்கள் மயானத்தில் குவியலாக குவித்து வைக்கப்பட்டு இருந்தது. அம்மனுக்கு தீபாராதனை காட்டிய பிறகு பக்தர்கள் பேச்சாயி வேடமணிந்து கிழங்கை கொள்ளை விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த கிழங்கை பக்தர்கள் சாப்பிடுவதால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும். நோய்கள் அனைத்தும் தீரும் என்பதால் பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிழங்குகளை எடுத்துச் சென்றனர். செம்பனார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா தலைமையில் திரளான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

திருக்கடையூர்

இதேபோல் திருக்கடையூர் கீழவீதியில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலில் மயான சூறை நிகழ்ச்சி நடந்தது. இதனையொட்டி. நான்கு கால அபிஷேக ஆராதனையும், கரகம் புறப்பாடும் நடந்தது. அப்போது பக்தர்கள் காளி வேடம் அணிந்து அமிர்தகடேஸ்வரர் கோவிலை சுற்றி உள்ள நான்கு வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று கோவிலுக்கு வந்தனர். அதனைத் தொடர்ந்து அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு பால், தேன், இளநீர், பன்னீர், விபூதி, சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னர் இரவு மயான சூறை நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை பொறையாறு போலீசார் செய்திருந்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்து இருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்