ராணுவ வீரரிடம் ரூ.14 லட்சம் கொள்ளையடித்த ஆந்திர வாலிபர் கைது

நெல்லை அருகே ராணுவ வீரரிடம் ரூ.14 லட்சம் கொள்ளையடித்த ஆந்திர வாலிபரை ‘தீரன்’ சினிமா பட பாணியில் போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-10-20 19:27 GMT

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கீழக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் முத்துராஜ் (வயது 32). ராணுவ வீரரான இவர் கடந்த 2-ந்தேதி விடுப்பில் சொந்த ஊருக்கு வந்தார்.

பின்னர் அவர் நெல்லை ஸ்ரீபுரத்தில் உள்ள ஒரு வங்கியில் இருந்து ரூ.14 லட்சத்தை எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளின் பெட்ரோல் டேங்க் பையில் வைத்து கொண்டு ஊருக்கு புறப்பட்டார்.

ரூ.14 லட்சம் கொள்ளை

நெல்லையை அடுத்த தாழையூத்து பஜாரில் பழக்கடை முன்பாக முத்துராஜ் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு பழம் வாங்கினார். இதனை நோட்டமிட்ட மர்மநபர் நைசாக மோட்டார் சைக்கிளின் பெட்ரோல் டேங்க் பையில் இருந்த ரூ.14 லட்சத்தை கொள்ளையடித்து சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில், தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். குற்றவாளியை கைது செய்ய துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தராஜ் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் சுமார் 100-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது, இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனில்குமார் மகன் பீட்லா சாமுவேல் (20) என்பது தெரியவந்தது.

ஆந்திர வாலிபர் கைது

இதையடுத்து தனிப்படை போலீசார் ஆந்திரா சென்றனர். நெல்லூர் மாவட்டத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் குற்றவாளியை பிடிக்க சென்ற போலீசாருக்கு அந்த பகுதி மக்கள் திரண்டு வந்து எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். ஆனால் போலீசார் 'தீரன்' திரைப்பட பாணியில் அவர்களுடன் போராடி பீட்லா சாமுவேலை கைது செய்து நெல்லைக்கு அழைத்து வந்தனர். அவரிடம் இருந்து ரூ.14 லட்சம் மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

எங்கும் சிக்கவில்லை

கைது செய்யப்பட்ட பீட்லா சாமுவேல் மற்றும் அவருடைய கூட்டாளிகள் இந்தியாவில் பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டியுள்ளனர். அவர்கள் வங்கிகளுக்குள் வாடிக்கையாளர் போல் சென்று, அங்கு அதிகளவில் பணம் எடுக்கும் நபர்களை பின்தொடர்ந்து சென்று பணத்தை கொள்ளையடிப்பதை தொழிலாக செய்து வந்தது தெரியவந்தது.

இதற்காக மோட்டார் சைக்கிளை அந்தந்த மாநிலத்திற்கு ஏற்ப பதிவெண்களை மாற்றி பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது. இதுவரை இவர் எங்கும் கைதானது இல்லை என போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்