பழங்கால கோவில், குதிரை சிலைகள் கண்டுபிடிப்பு
சாணார்பட்டி அருகே 18-ம் நூற்றாண்டை சேர்ந்த கோவில், குதிரை சிலைகள், கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது.;
முடிமலை ஆண்டவர் கோவில்
திண்டுக்கல்லை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் விஸ்வநாததாஸ் தலைமையிலான குழுவினர், சாணார்பட்டி அருகே உள்ள செங்குறிச்சியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பழங்கால கோவில், குதிரை சிலைகள், கல்வெட்டு ஆகியவை கண்டுபிடித்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து அந்த குழுவினர் நிருபர்களிடம் கூறியதாவது:-
செங்குறிச்சியில் 18-ம் நூற்றாண்டில் முடிமலை ஆண்டவர் என்னும் சிவன் கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவில் 10-க்கு 10 என்ற சதுர அடி அளவில் அமைந்துள்ளது. கருங்கல்லால் அஸ்திவாரம் போடப்பட்டு செங்கல், சுண்ணாம்பு, காரை ஆகியவற்றை கொண்டு விமானம் அமைக்கப்பட்டுள்ளது. செங்கல்லினால் கலசம் உள்ளது.
விமானத்தை சுற்றி பூத கணங்களும், அதன் நான்கு புறத்திலும் திக்பாலகர்களும், காளைகளும் அமர்ந்த நிலையில் ஒற்றை கருவறையாக உள்ளது. அதன் உள்ளே லிங்க படிமம் இல்லை. கோவிலும் சிதிலமடைந்த நிலையில் காணப்படுகிறது.
குதிரை சிலைகள்
கோவிலுக்கு வெளியே பல்வேறு அழகிய வேலைபாடுகளுடன் கூடிய பீடத்தின் மீது அமைக்கப்பட்ட 2 குதிரை சிலைகள் உள்ளன. இவை 25 அடி உயரமும், 20 அடி நீளமும் கொண்டதாகும். மேலும் காவல் தெய்வங்களாக ஆண், பெண் பூத கணங்கள், சிங்கத்தலை கொண்ட மனித உடல், அன்னப்பறவை, முண்டாசு தலைப்பாகையுடன் வீரர்களின் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
குதிரை சிலையின் கீழே கல்வெட்டு ஒன்று உள்ளது. அதில், உலக சிவமயம் (கலியுகம் 4989-ம் ஆண்டு) 1888-ம் ஆண்டு சர்வதாரி வருடம் ஆவணி மாதம் 6-ம்நாள் முடிமலை ஆண்டவருக்கு கோவில் கட்டியதாக தகவல் உள்ளது.
அந்த கிராமத்தில் வசிக்கிற மக்கள் நலமுடன் வாழ்வதற்கு செங்குறிச்சி, மடுவூர் ஜமீன்தார் முத்துவீரவெங்கடசாமி நாயக்கர், 2 சேம புரவிகள் (குதிரைகள்) செய்து வைத்த தகவலும் கல்வெட்டில் இடம்பெற்றுள்ளது. இந்த கோவிலின் அருகே 12 கால் கல்மண்டம் ஒன்றும் உள்ளது.
கிராமிய வழிபாட்டின் முக்கிய மைல் கற்களாக இந்த சிற்பங்களை போற்றி பாதுகாக்க வேண்டும். மேலும் இந்த கோவிலின் மேற்கு பகுதியில், காட்டுக்குள் செங்கல் மற்றும் சுண்ணாம்பால் கட்டப்பட்ட குதிரை சிற்பம் காவல் தெய்வமாக உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.