200 ஆண்டுகள் பழமையான ஆலமரம் வேருடன் அகற்றம்
திருச்செங்கோட்டில் பசுமையை தந்த 200 ஆண்டுகள் பழமையான ஆலமரம் வேருடன் அகற்றி, வேறு இடத்தில் பாதுகாப்பாக நடப்பட்டது.
எலச்சிபாளையம்
200 ஆண்டுகள்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ராஜா கவுண்டம்பாளையம் பகுதியில் 200 ஆண்டுகள் பழமையான ஆலமரம் ஒன்று இருந்தது. இந்த மரம் இங்குள்ள மக்களுக்கு நிழல் தரும் மரமாக விளங்கி வந்தது. இந்தநிலையில் திருச்செங்கோட்டில் இருந்து பள்ளிபாளையம் வரை உள்ள சாலையை 4 வழிச்சாலையாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளால் சாலையோரம் உள்ள புளிய மரங்கள் உள்ளிட்ட பல்வேறு மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன.
இதனிடையே ராஜா கவுண்டம்பாளையம் முனியப்பன் கோவில் அருகே இருந்த 200 ஆண்டுகள் பழமையான ஆலமரத்தையும் அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் இதற்கு அந்த பகுதி பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் சாலை விரிவாக்க பணிக்காக ஆலமரம் கட்டாயம் அகற்ற வேண்டி இருப்பதை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பொது மக்களுக்கு தெரிவித்தனர்.
வேருடன் அகற்றம்
பசுமையாக காட்சி அளித்த பழமையான ஆலமரத்தை அகற்ற மனம் இல்லாத மக்கள் மரத்தை வேருடன் அகற்றி வேறு இடத்தில் நட்டு பராமரிக்க முடிவு செய்தனர். இதற்காக பொது மக்கள் 3 கிரேன், 2 பொக்லைன் எந்திரங்கள் ஆகியவற்றின் உதவியுடன் பழமையான ஆலமரத்தை வேருடன் அகற்றி அருகில் இருந்த காலி இடத்தில் நடும் பணியை மேற்கொண்டனர். கிராம மக்கள் ஒன்றிணைந்து இந்த பணியில் ஈடுபட்டனர்.
முன்னதாக மரத்தின் கிளைகள் வெட்டப்பட்டன. பின்னர் மரத்தின் வேர் சிதையாமல் இருக்க மரத்தை சுற்றிலும் பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது மரத்தின் வேருக்கு அடிப்பகுதியில் இருந்து தண்ணீர் பெருக்கெடுத்தது. இதனால் வேர் பாதிக்கும் நிலை ஏற்பட்டது. எனினும் மிகவும் பாதுகாப்பாக வேருடன் மரம் அகற்றப்பட்டது.
மக்கள் மகிழ்ச்சி
இதனிடையே மரத்தை நடுவதற்காக அருகில் உள்ள காலி இடத்தில் பள்ளம் தோண்டப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆலமரத்தை அகற்றி அதனை கிரேன் மூலம் கொண்டு சென்று, அந்த இடத்தில் நட்டு வைத்தனர். இந்த பணி வெற்றிகரமாக முடிவடைந்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இது குறித்து அந்த பகுதி பொது மக்கள் கூறுகையில், 'ராஜா கவுண்டம்பாளையத்தில் அடையாளமாக கருதப்பட்ட ஆலமரம் மீண்டும் துளிர்க்கும். எங்களது பாரம்பரியம் காக்கப்படும். பழமையான மரங்கள் இது போன்று வேருடன் பிடுங்கி நடுவதன் மூலம் அவை பாதுகாக்கப்படும். மேலும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு உதவியாக இருக்கும்' என்றனர்.
இதனிடையே பழமையான ஆலமரத்தை வேருடன் பிடுங்கி வேறு இடத்தில் நடப்பட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.