மணல் கொள்ளையை தடுக்க முயன்ற அதிகாரிகள் மீது கொலை முயற்சி: குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
பழனி அருகே மணல் கொள்ளையை தடுக்க முயன்ற அதிகாரிகள் மீது கொலை முயற்சி மேற்கொண்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
கொலை முயற்சி
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது:-
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த ஆயக்குடி பகுதியில் சட்டவிரோதமாக மணலை எடுத்துச்சென்ற வாகனங்களை பிடித்த ஆயக்குடி கிராம நிர்வாக அலுவலர் கருப்பசாமி, அவரது உதவியாளர் மகுடீஸ்வரன், 2 போலீசார் என 4 பேர் மீது ஆற்று மணலைக் கொட்டியும், லாரியை ஏற்றியும் படுகொலை செய்ய முயன்ற நிகழ்வு அதிர்ச்சி அளிக்கிறது.
இதுதொடர்பாக தி.மு.க. நிர்வாகிகள் சக்திவேல், பாஸ்கரன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்திருக்கும் காவல்துறையினர், இதுவரை அவர்களை கைது செய்யாதது கண்டிக்கத்தக்கது. ஈடுசெய்ய முடியாத இயற்கை வளமான மணல் தொடர்ந்து கொள்ளையடிக்கப்படுவதும், அதைத் தடுக்க எந்த வகையிலும் நடவடிக்கை எடுக்கப்படாததும் மிகவும் வருத்தம் அளிக்கிறது.
கைதுசெய்ய வேண்டும்
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு பகுதியில் மணல் கொள்ளைக்கு எதிராக செயல்பட்ட கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் சில மாதங்களுக்கு முன் வெட்டிக் கொல்லப்பட்டது, சேலம் மாவட்டம் மானாத்தாள் பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்டவர்களை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த கிராம நிர்வாக அலுவலரை வெட்ட அரிவாளுடன் துரத்திய சம்பவங்களுக்கு அடுத்து பழனி அருகே நிகழ்ந்துள்ள கொலை முயற்சி எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது ஆகும்.
முறப்பநாடு பகுதியில் மணல் கொள்ளையை தடுத்த கிராம நிர்வாக அலுவலர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு விரைவாக தண்டனை பெற்றுத்தரப்பட்டதை போன்று, இந்த வழக்கிலும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து, விரைவாக தண்டனை பெற்றுத்தர வேண்டும். அதன் மூலம் மணல் கொள்ளைக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.