தமிழக வளர்ச்சிக்கு திராவிட கட்சிகள் எதுவும் செய்யவில்லை அன்புமணி ராமதாஸ் எம்.பி. குற்றச்சாட்டு
தமிழக வளர்ச்சிக்கு திராவிட கட்சிகள் எதுவும் செய்யவில்லை என டாக்டர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டி பேசினார்.;
பெத்தநாயக்கன்பாளையம்,
பா.ம.க. கொடியேற்று விழா
பெத்தநாயக்கன்பாளையத்தில் பா.ம.க. சார்பில் வன்னியர் சங்க கொடியேற்று விழா நடந்தது. கிழக்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் ஜெயபிரகாஷ் தலைமை தாங்கினார். நகர செயலாளர் சரவணன், ஒன்றிய செயலாளர்கள் சடையப்பன், சங்கர், தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்னரசு வரவேற்றார்.
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்து கொண்டு கட்சி கொடி ஏற்றி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
கடந்த 55 ஆண்டுகால திராவிட கட்சிகள் தமிழகத்தின் வளர்ச்சிக்கு என்று எந்த திட்டங்களையும் கொண்டு வரவில்லை. பா.ம.க.வின் நோக்கம், அடுத்த தலைமுறையை காக்க வேண்டும் என்பதுதான். மேட்டூர் உபரி நீர் வீணாக கடலில் கலக்கிறது. நீர் மேலாண்மையை தமிழக அரசு சரியாக செயல்படுத்த வேண்டும். 10.5 சதவீத இட ஒதுக்கீடுக்காக நாம் போராடிக் கொண்டிருக்கிறோம். அதற்கு நல்ல முடிவு கிடைக்கும். இல்லை என்றால் தமிழகத்தில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்தி, ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் குணசேகரன், மாவட்ட தலைவர் பச்சைமுத்து, மாவட்ட அமைப்பு செயலாளர் ராஜன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் மயில்சாமி, நடராஜன், மாவட்ட பொறுப்பாளர்கள் ராஜேஷ், கவுதம், பெரியசாமி, மனோஜ், கமல், ஊராட்சி மன்ற தலைவர்கள் முருகன், தனபால், துணை தலைவர்கள் பாக்கியராஜ், சத்யராஜ், மாசி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ராஜா நாட்டார் நன்றி கூறினார்.
தலைவாசல்
தொடர்ந்து தலைவாசலை அடுத்த காட்டகோட்டை பஸ் நிறுத்தத்தில் பா.ம.க. கொடியேற்று விழா நடந்தது. யூனியன் கவுன்சிலர் பூங்கோதை துரைசாமி வரவேற்றார். தலைவாசல் யூனியன் துணை தலைவர் அஞ்சலை ராமசாமி, வரகூர் யூனியன் கவுன்சிலர் சுதா பொன்னுசாமி, மாநில செயற்குழு உறுப்பினர்கள், நடராஜன் குல்லுமூப்பர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுந்தரம், இளைஞர் அணி செயலாளர் திருமால், ஒன்றிய செயலாளர் குமரேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் ஊராட்சி தலைவர் அன்பழகன் மற்றும் பல்வேறு தரப்பினர் ஏராளமான கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அன்புமணி ராமதாசிடம் கொடுத்தனர்.
5 ஆயிரம் ஏரிகள்
மனுவை பெற்றுக் கொண்ட அவர் பேசுகையில், தமிழகத்தில் ஆட்சியாளர்கள் முறையான நீர் மேலாண்மை செய்யவில்லை. இதனால் 42 ஆயிரம் ஏரிகளில் 5 ஆயிரம் ஏரிகளை காணவில்லை. ஆக்கிரமிப்புகள் நிறைந்துள்ளன. அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகள் அருகில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை முற்றிலும் தடுக்க வேண்டும். தமிழகத்தின் அனைத்து வளங்களையும் பாதுகாக்க எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என்றார்.
முன்னதாக அவருக்கு பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஏராளமானவர்கள் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.