அன்புஜோதி ஆசிரமத்தில் நடந்த சோதனையில்வங்கி கணக்கு, வரவு- செலவு தொடர்பான ஆவணங்கள் கிடைக்காததால் போலீசார் குழப்பம்

அன்புஜோதி ஆசிரமத்தில் நடந்த சோதனையில் வங்கி கணக்கு, வரவு- செலவு தொடர்பான ஆவணங்கள் கிடைக்காததால் போலீசார் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Update: 2023-02-18 18:45 GMT


விழுப்புரம் குண்டலப்புலியூரில் உள்ள அன்புஜோதி ஆசிரமத்தை கேரளா மாநிலம் எர்ணாவூர் ஆழக்கூடா பகுதியை சேர்ந்த ஜூபின்பேபி மற்றும் அவரது மனைவி மரியாஜூபின் ஆகியோர் நிர்வகித்து வந்துள்ளனர். இந்த ஆசிரமம் மீது தற்போது அடுக்கடுக்கான புகார்கள் குவிந்து வருகின்றன. இதற்கிடையே ஆசிரமம் தொடர்பான வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வருவாய்த்துறை அதிகாரிகளும், கெடார் போலீசாரும் அந்த ஆசிரமத்தில் சோதனை மேற்கொண்டனர். சோதனையின் போது ஆசிரமத்துக்கான வங்கி கணக்கு புத்தகங்கள் எதுவும் போலீசாரின் சோதனையில் சிக்கவில்லை. அதுபோல் வரவு, செலவு புத்தகங்களும் கிடைக்கவில்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே 3 மாடி கட்டிடமாக உள்ள அந்த ஆசிரமத்தில் தற்போது அதற்கு மேல் 2 மாடி கட்டிடம் கட்டுவதற்கான கட்டுமான பணிகளையும் ஜூபின்பேபி மேற்கொண்டுள்ளார். இந்த கட்டுமான பணிக்கு கூலியாட்களை வைத்தால் ஆசிரமத்தில் நடக்கும் அம்பலங்கள் வெளியே தெரிந்துவிடக்கூடும் என்று கருதி கூலியாட்களுக்கு பதிலாக ஆசிரமத்தில் தங்கியிருந்தவர்களையே வேலையாட்களாக பயன்படுத்தியுள்ளார்.

மேலும் இந்த ஆசிரமத்தில் 150 பேர் வரை தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில் ஆசிரம பராமரிப்பு செலவு, அங்கு தங்கியிருந்தவர்களுக்கான உணவு செலவு இவற்றுக்கெல்லாம் ஜூபின்பேபிக்கு எங்கிருந்து பண உதவி வந்துள்ளது, யார், யாரெல்லாம் அவர்களுக்கு மறைமுகமாக உதவி செய்துள்ளார்கள் என்றும் எந்தவொரு வங்கி கணக்கு தொடர்பான ஆவணங்களும், வரவு- செலவு புத்தகங்களும், ஆசிரமத்திற்கான பராமரிப்பு செலவுக்கான ரசீதுகளும் போலீசாரிடம் சிக்காததால் அவர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்