பெட்ரோல் ஊற்றப்பட்ட மூதாட்டி மீது தீப்பற்றியதால் பரபரப்பு

பெட்ரோல் ஊற்றப்பட்ட மூதாட்டி மீது தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-03-11 19:30 GMT

மங்களமேடு:

பெட்ரோலை ஊற்றினர்

பெரம்பலூர் மாவட்டம், மங்களமேட்டை அடுத்த அத்தியூர் கிராமத்தில் உள்ள இந்திரா நகரை சேர்ந்தவர்கள் மோகன்தாஸ்(வயது 40), ராஜதுரை(30). கூலித்தொழிலாளர்களான இவர்கள் 2 பேரும், ராஜதுரையின் மோட்டார் சைக்கிளில் நேற்று முன்தினம் அகரம்சீகூரில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது குடித்துள்ளனர். பின்னர் மதியம் மோகன்தாசின் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் வாங்கிக்கொண்டு, வீட்டிற்கு வந்துள்ளனர்.

அப்போது அதே பகுதியை சேர்ந்தவரும், மோகன்தாசின் உறவினருமான மஞ்சாயி (75), அவர்கள் 2 பேரையும் பார்த்து 'வண்டியில் பெட்ரோல் இல்லையா' என்று கேட்டுள்ளார். அதற்கு அவர்கள், 'இல்லை, உன் மீது பெட்ரோலை ஊற்றி எரிக்கத்தான் வாங்கி வந்தோம்' என்று கூறி, விளையாட்டாக பெட்ரோலை மூதாட்டி மீது ஊற்றி பேசிக்கொண்டிருந்தனர்.

தீப்பற்றி எரிந்தது

அப்போது ராஜதுரை பிடித்து கொண்டிருந்த சிகரெட்டில் இருந்து பறந்த தீப்பொறி மஞ்சாயி மீது விழுந்து தீப்பிடித்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அருகில் இருந்தவர்கள், உடனடியாக மூதாட்டியின் மீது எரிந்த தீயை அணைத்தனர். இதில் மஞ்சாயிக்கு இடது கை மற்றும் வயிற்றுப் பகுதியில் தீக்காயம் ஏற்பட்டது.

மேலும் அவரை மீட்டு 108 ஆம்புலன்சில் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின்பேரில் மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மோகன்தாஸ், ராஜதுரை ஆகியோரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்