இடப்பிரச்சினையில் கீழே தள்ளி முதியவர் கொலை
திருமருகல் அருகே இடப்பிரச்சினையில் முதியவரை கீழே தள்ளி கொன்ற உறவினரை போலீசார் கைது செய்தனர்.
திட்டச்சேரி:
திருமருகல் அருகே இடப்பிரச்சினையில் முதியவரை கீழே தள்ளி கொன்ற உறவினரை போலீசார் கைது செய்தனர்.
இடப்பிரச்சினை
நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஆதலையூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் ஜமால் முகமது(வயது 84). இவரது மனைவி ரஹ்மத்கனி(78).
ரஹ்மத்கனியின் அண்ணன் காதர் சுல்தான் மற்றும் அக்கா சபியா அம்மாள் ஆகியோருக்கு சொந்தமான கொல்லை மற்றும் ஓட்டு வீடு பாகப்பிரிவினை செய்யப்படாமல் உள்ளது.
இந்த நிலையில் கடந்த 19-ந் தேதி கொல்லையில் உள்ள ஒரு மரத்தை காதர் சுல்தான் மகன் அப்துல் அஜீஸ்(52) என்பவர் ஆட்களை வைத்து வெட்டி உள்ளார். அதனை கண்ட ஜமால் முகமது, பொதுவான இடத்தில் உள்ள மரத்தை எங்களை கேட்காமல் எப்படி வெட்டுகிறாய்? என்று கேட்டு தடுத்துள்ளார்.
கொலை மிரட்டல்
அன்று இரவு ஆலமரத்தடி கடைத்தெருவிற்கு பொருட்கள் வாங்க ஜமால் முகமது தனியாக வந்துள்ளார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த அப்துல் அஜீஸ், என் வீட்டு மரத்தை வெட்டினால் நீ ஏன் தடுக்கிறாய்? என கேட்டு அவரது நெஞ்சில் கை வைத்து கீழே தள்ளிவிட்டதுடன் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளார்.
இதில் கீழே விழுந்து காயம் அடைந்த ஜமால் முகமதுவை அக்கம், பக்கத்தினர் மீட்டு நன்னிலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அங்கிருந்து தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கைது
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஜமால் முகமது நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்்தார்.
இது குறித்து தகவல் அறிந்த திருக்கண்ணபுரம் போலீசார் ஜமால் முகமதுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து அப்துல் அஜீசை கைது செய்தனர்.