வாடகை முன்பணத்தை திருப்பி கேட்டதால் தகராறில் முதியவர் அடித்துக்கொலை
வாடகை முன்பணத்தை திருப்பி கேட்டதால் ஏற்பட்ட தகராறில் முதியவர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வீட்டு உரிமையாளரின் மகன் கைது செய்யப்பட்டார்.
வாடகை வீட்டில்
கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 60), இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் திருமணமாகி சொந்த ஊரான சிதம்பரத்தில் வசித்து வருகிறார். மற்றொரு மகள் சிங்கபெருமாள் கோவில் அருகே உள்ள மகேந்திரா சிட்டியில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் மறைமலைநகர் அருகே அனுமந்தபுரம் சாலையில் உள்ள பாரதி நகர் பகுதியில் பெருமாள் என்பவரின் வீட்டில் கடந்த மாதம் சந்திரசேகர் குடும்பத்துடன் வாடகைக்கு குடியேறினார். அந்த வீட்டில் மகள், மனைவிவுடன் அவர் வசித்து வந்தார்.
அந்த வீட்டில் கழிவுநீர் முறையாக வெளியேற வசதி இல்லாததால் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை காலி செய்வதாக சந்திரசேகர் வீட்டு உரிமையாளரிடம் கூறியுள்ளார். இதையடுத்து சந்திரசேகர் வீட்டை காலி செய்துவிட்டு அதே செங்குன்றம் சாலையில் உள்ள ராகவா நகர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிய வாடகை வீட்டில் குடியேறினார்.
முன்பணத்தை திருப்பி கேட்டார்
இந்த நிலையில் ஏற்கனவே தான் குடியிருந்த வீட்டுக்கு கொடுத்த முன்பணத்தை சந்திரசேகர் பழைய வீட்டு உரிமையாளரிடம் நேற்று முன்தினம் மாலை கேட்டார். அப்போது வீட்டு உரிமையாளர் மனைவி ராணிக்கும், சந்திரசேகருக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து ராணி வேலைக்கு சென்ற தனது மகன் நரேந்திரன் (30) என்பவரிடம் செல்போனில் நடந்த சம்பவங்களை தெரிவித்தார். பணி முடிந்து வீட்டுக்கு வரும்போது முன்பணத்தை கேட்ட சந்திரசேகர் வேலைக்கு சென்ற தனது மகளை வீட்டுக்கு அழைத்து செல்வதற்காக செங்குன்றம் சாலையில் நின்று கொண்டிருந்தார்.
கொலை
இதை பார்த்த நரேந்திரன் ஆத்திரம் அடைந்து சந்திரசேகரிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை கையால் அடித்து கீழே தள்ளி உள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த சந்திரசேகர் மயங்கினார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சந்திரசேகரை பரிசோதனை செய்துவிட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த மறைமலைநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நடந்த சம்பவங்கள் பற்றி அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். உயிரிழந்த சந்திரசேகரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
கைது
இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொடுத்த முன்பணத்தை திருப்பி கேட்ட முதியவரை கீழே தள்ளி கொலை செய்ததாக வீட்டு உரிமையாளரின் மகன் நரேந்திரனை கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.